பிரியா பவானி சங்கர்
ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இன்று தனது 34 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பில் தன் கரியரைத் தொடங்கிய பிரியா பவானி சங்கர், விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல்வரை தொலைக்காட்சித் தொடரில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்தப் படம் அவருக்கு பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்தன.
தமிழ் பேசும் கோலிவுட் நடிகை
தமிழ் சினிமாவில் பெரும்பாலும் பிற மொழி நடிகைகளே ஆதிக்கம் செலுத்தும் சூழலில், தமிழ் மொழியைச் சேர்ந்த ஒரு நடிகை ஒவ்வொரு முறை அறிமுகமாகும் போதும் அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.
அந்த வகையில் தனக்கு கிடைத்த வரவேற்பை அழகாக தக்கவைத்துக் கொண்டவர் பிரியா. கார்த்தியுடன் கடைகுட்டி சிங்கம், எஸ் ஜே.சூர்யாவுடன் மான்ஸ்டர், மாஃபியா என தொடர்ந்து படங்களில் நடித்த பிரியா பவானி சங்கர், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் வரிசையில் இடம்பிடித்தார்.
தொடர்ச்சியான படவாய்ப்புகள் இருந்தும் குறிப்பிட்டு சொல்லும்படியான கதாபாத்திரம் அவருக்கு அமையவில்லை. தொடர்ந்து களத்தில் சந்திப்போம், கசட தபற, ஓமனப் பெண்ணே, யானை, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம், அகிலன் , பத்து தல, ருத்ரன், பொம்மை, உள்ளிட்ட இவர் நடித்தார். இந்த ஆண்டு மட்டும் 5 படங்களில் நடித்துள்ள பிரியா பவானி சங்கருக்கு வரும் ஆண்டும் வெற்றிகரமான ஆண்டாக அமைய வாழ்த்துகள்!