பிரபல தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான சூப்பர்ஹிட் சீரியல் ‘சரவணன் மீனாட்சி’. அதில் சரவணன் மீனாட்சியின் ரொமான்ஸை ரசித்தவர்களைவிட மீனாட்சியின் பாசக்கார அண்ணன் கதாப்பத்திரத்தின் நேர்த்தியான நடிப்புக்கு ரசிகர்கள் ஏராளம். 12 ஆண்டுகளுக்கு மேல் இந்த நடிப்புத்துறையில் இருந்தாலும் ’ஏப்பா தமிழு’ எனச் சீரியலில் யாரேனும் அழைக்கும்போது மூக்குப் புடைக்க தடித்த குரலில் பதில் கொடுக்கும் தமிழரசன் கதாப்பாத்திரத்தின் மூலம்தான் நடிகர் ஸ்டாலின் முத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
தற்போது சூப்பர்ஹிட் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்துவரும் ஸ்டாலின் அந்த சீரியலில் குடும்பத்தின் மூத்த அண்ணன் மூர்த்தியாக நடிக்கிறார். நடிப்புக்கு வந்து 12 வருடங்களானாலும் உண்மையில் அவரது முதிர்ச்சியான நடிப்பால் அனைவருக்குமே அவர் மூத்த அண்ணன் மூர்த்தி மாதிரிதான் என்கின்றனர் சீரியலில் அவருடன் இணைந்து நடிப்பவர்கள். லிங்குசாமி இயக்கத்தில் தமிழில் வெளியான ‘ஆனந்தம்’ திரைப்படத்தின் கிட்டத்தட்ட தழுவல்தான் இந்தப் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். ஆனந்தம் படத்தில் மம்மூட்டியின் நடிப்பை இந்த சீரியலில் ஸ்டாலின் முத்து ஈடுகட்டியாக வேண்டும் என்கிற நிலையில் அதனை கச்சிதமாகச் செய்திருக்கிறார் இவர்.
தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஸ்டாலின் பிரபல தமிழ் இயக்குநர் பாரதிராஜாவின் அண்ணன் மகன். திரைத்துறைக்கு வரும்போதே அதனால் அவரது நடிப்பின்மீதும் பெருத்த எதிர்ப்பார்ப்பு இருந்தது. பாரதிராஜாவின் அண்ணன் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். வாத்தியார் பிள்ளை மக்கு என்பார்கள். ஆனால் ஸ்டாலின் முத்துவின் வாழ்க்கையில் அது முற்றிலும் முரண். தனது சித்தப்பா தமிழ்நாடே போற்றும் இயக்குநர் என்றாலும் முழுக்க முழுக்கத் தனது நடிப்புத்திறமையால் மட்டுமே முன்னுக்கு வந்தவர் ஸ்டாலின். அவர் இயக்கிய தெற்கத்திப் பொண்ணு சீரியலில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் முத்து.
நடிப்பில் தேர்ந்த முத்துவை பிரபல தொலைக்காட்சி தத்தெடுத்துக் கொண்அது என்றே சொல்லலாம்.
ஆண்டாள் அழகர், கனா காணும் காலங்கள் என அந்தத் தொலைக்காட்சியின் சீரியல்களில் தொடர்ந்து அண்ணன் கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். இதுதவிர மற்றொரு தொலைக்காட்சியில் வெளியான பாசமலர் போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். இதற்கடுத்து மாப்பிள்ளை, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய சீரியலில் நடிக்கிறார்.
இவரது பெர்சனல் பக்கத்தைப் பொறுத்தவரை திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். மனிதர் ஆன் ஸ்க்ரீனில் எப்படியோ அப்படியேதான் ஆஃப் ஸ்க்ரீனிலும் பழகுவதற்குப் பக்கத்து வீட்டு நபர் போன்றவர் என்கின்றனர் இவரை நன்கு அறிந்தவர்கள். சின்னத்திரையின் நிரந்தர சிப்ளிங்...ஆல்டைம் அண்ணன் இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காமல் தனது சித்தப்பாவுக்கும் பெருமை சேர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.