வராஹ சுவாமி பிலிம்ஸ் சார்பில் கே.வினோத்குமார் தயாரிப்பில், எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் பிரபல நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘லோக்கல் சரக்கு’. இதில் நாயகியாக உபாசனா நடித்திருக்கிறார். யோகி பாபு மிக முக்கியமன வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் செண்ட்ராயன், சாம்ஸ், இமான் அண்ணாச்சி, சிங்கம் புலி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.


லோக்கல் சரக்கு:


வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருப்பதோடு, படத்தின் மீது எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் புதிய டிரைலர் வெளியீட்டு விழா ஜூலை 12 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நடிகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் கே.ராஜன், இசைக்கலைஞர்கள் சங்க தலைவர் தீனா, நடிகை வனிதா விஜயகுமார்,  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் விஜய முரளி, இணைச் செயலாளர் செளந்தரரஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.


இந்நிகழ்ச்சியில் பேசிய கே.ராஜன், ”தம்பி ராஜேஷ் திறமைசாமி, நல்ல இசை ஞானம் உள்ளவர். குறைந்த நாளில், குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான படத்தை தயாரித்திருக்கிறார். நாங்கள் படம் பார்த்தோம், படம் சிறப்பாக இருக்கிறது. பெரிய நடிகர்கள் நிறைந்த படமாக இருக்கிறது. குடும்ப கதையை மக்களுக்கு பாடமாக சொல்லியிருக்கிறார்கள்.


மகிழ்ச்சி:


லோக்கல் சரக்கால் எத்தனையோ குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. லோக்கல் என்றாலும் சரி, ஒரிஜினலாகா இருந்தாலும் சரி, எந்த சரக்காக இருந்தாலும் அது குடும்பத்தை கெடுக்கும். அதனால், மதுவை தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுப்பவர்களில் நானும் ஒருவன். தமிழ்நாட்டில் மட்டும் கேட்டு எந்த பயனும் இல்ல, இங்கு தடை பண்ணால் பாண்டிச்சேரி, பெங்களூர், ஆந்திராவுக்கு போகிறார்கள். ஆனால், நம் முதலமைச்சர் தடை பண்ணி, காவல்துறை மூலம் பாதுகாப்பை பலப்படுத்தினால், பல கோடி குடும்பங்களை காப்பாற்றலாம். அந்த விஷயத்தை மிக சிறப்பாக இந்த படத்தில் சொல்லியிருக்கிறார்கள், அதற்காகவே இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும். இதுபோன்ற படங்களை பார்க்கும் போது மகிழ்சியாக இருக்கிறது, மனதில் இருந்து வாழ்த்த தோன்றுகிறது.


3 கோடி ரூபாய் சம்பளம்:


இன்றைய காலக்கட்டத்தில் தயாரிப்பாளர்களின் நிலை மிக மோசமாக இருக்கிறது. ஒரு படம் உருவாக பணம் போடுவது தயாரிப்பாளர் தான், ஆனால் அந்த படம் வெற்றி பெற்றால் கூட அவருக்கு எதுவும் கிடைப்பதில்லை. அந்த படத்தின் நாயகன் தான் கோடி கோடியாய் சம்பளம் வாங்குகிறார். சமீபத்தில் டாடா என்ற படம் வெற்றி பெற்றது. உடனே அந்த ஹீரோ பின்னாடி தயாரிப்பாளர்கள் போகிறார்கள்.


ஒரு தயாரிப்பாளர் வந்ததும் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறார். நான்கு தயாரிப்பாளர்கள் அவரை தேடி சென்ற உடன், தனது சம்பளத்தை மூன்று கோடி ரூபாயாக உயர்த்தி விடுகிறார். ஹீரோக்கள் சம்பளத்தை உயர்த்த தயாரிப்பாளர்களும் ஒரு காரணம், இந்த நிலை மாற வேண்டும். இன்று எஸ்.வி.சேகர் விஷயத்திலும், அந்த நடிகர் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, ‘லோக்கல் சரக்கு’ வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்றார்.