நடிகர் ரஜினிகாந்தைப் போல விஜய்யும் தன்னை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு உதவிய சம்பவத்தை அதில் ஒருவரான சௌந்திரபாண்டி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபலங்கள் எல்லாம் திரைக்கு முன்னால் ஒரு மாதிரியும், திரைக்கு பின்னால் ஒரு மாதிரியும் இருப்பதாக சொல்வார்கள். இதில் ஒரு சில பேர் எப்போதும் ஒரே மாதிரி இருப்பார்கள். பழையதை மறக்காமல் தன் சினிமா வாழ்க்கை உயர உதவிய அத்தனை பேரையும் நன்றி மறக்காமல் தேவைப்படும் நேரத்தில் உதவி செய்வார்கள். சிலர் செய்யும் உதவி வெளியே தெரியும். சிலர் செய்வது தெரியாது. அப்படியாக நடிகர் விஜய் செய்த உதவியை தயாரிப்பாளர் சௌந்தரபாண்டியன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதாவது, நம்ம காலக்கட்டத்தில் ரஜினி, கமல்ஹாசன், கார்த்திக், பிரபு உள்ளிட்ட 7 ஹீரோக்கள் தயாரிப்பாளர்களுக்கு தெய்வமாக திகழ்ந்தார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஜய் உள்ளார். அவர் எங்களுக்கு உதவி செய்திருக்கிறார். எனக்கு, கேஆர்ஜி குடும்பம், எம்.பாஸ்கர், எம்.ஆர். உள்ளிட்ட 6 பேருக்கு உதவி செய்தார். சூப்பர்குட் பிலிம்ஸ், ஆர்பி சௌத்ரி தயாரிப்பில் விஜய்யும், மோகன்லாலும் “ஜில்லா” படத்தில் இணைந்து நடித்தனர்.
இந்த படம் 2014 ஆம் ஆண்டு வெளியானது. ஜில்லா படம் ரிலீசாவதற்கு முன்னால் விஜய் எங்கள் 6 பேரையும் அழைத்து தலா ரூ.5 லட்சம் பணம் கொடுத்தார். நான் அப்போது அவரிடம் எங்களுக்கு ஒரு டேட் கொடுங்கள். அதை வைத்து எங்கள் வாழ்க்கைக்கு உதவுங்கள் என சொன்னேன். விஜய்யிடம் இருந்து சிரிப்பு மட்டுமே பதிலாக வந்தது. கடந்த வாரம் கூட இதைப்பற்றி பேசினோம். நாங்கள் விஜய்யை வைத்து ஆரம்ப காலக்கட்டங்களில் படம் தயாரித்தவர்கள் என்பதால் இந்த நேர்காணல் மூலமாக கேட்டுக் கொள்கிறேன்” என சௌந்தரபாண்டி தெரிவித்துள்ளார். சௌந்தரபாண்டி விஜய்யை வைத்து ராஜாவின் பார்வையிலே படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி பாணியில் விஜய்
முன்னதாக நடிகர் ரஜினி 1998 ஆம் ஆண்டு அருணாச்சலம் படத்தை சொந்தமாக தயாரித்து நடித்திருந்தார். இந்த படம் மூலம் கிடைத்த பணத்தை தன் சினிமா வாழ்வில் மிக முக்கியமான 7 பேருக்கு பணம் கொடுத்து உதவினார். இதேபோல் ரஜினியை வைத்து பல படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமன் தன் உதவியாளருக்கு உதவ கேட்டுக்கொண்டதன் பேரில் பாண்டியன் படத்தில் நடித்துக் கொடுத்தார். அந்த வகையில் விஜய்யும் உதவியிருப்பதை அவரது ரசிகர்கள் பெருமையோடு சமூக வலைத்தலங்களில் பகிர்ந்து வருகின்றனர்.