தெலுங்கு திரையுலகின் மிகவும் பிரபலமான ஹீரோ ரவி தேஜா தனது தயாரிப்பு நிறுவனமான ஆர்.டி. டீம் ஒர்க்ஸ் நிறுவனத்துடன் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. செல்ல அய்யாவு இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் விஷ்ணு  விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா லக்ஷ்மி. உதயநிதி  ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது. கட்டா குஸ்தி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் ரவி தேஜா, உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிறப்பு விருந்தினராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டு படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டனர்.  


 



தயாரிப்பாளர் ரவி தேஜா பேசுகையில் :


கட்டா குஸ்தி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பட தயாரிப்பாளர் ரவி தேஜா தமிழில் பேசியது அங்கிருந்த அனைவராலும் வரவேற்கப்பட்டது. "நான் இதுவரையில் படத்தை முழுமையாக பார்க்கவில்லை எனக்கு காட்டவே இல்லை. படம் எப்படி வந்திருக்கு என்று உதயிடம் கேட்டேன் அவரும் நன்றாக வந்திருக்கு என்று கூறினார். விஷ்ணு விஷாலுடன் உடனே கன்னெட்டாகி விட்டேன். பாசிட்டிவான, நேர்மையான, கடினமான உழைப்பாளி. அவருடன் இந்த படம் மூலம் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி. 'ராட்சசன்' படம் எனக்கு மிகவும் பிடித்து இருந்து. நான் அதன் தமிழ் ரீ மேக்கில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் அது நடக்காமல் போனது. இயக்குனர் செல்லா அய்யாவுவிடம் யூனிக் காமெடி சென்ஸ் உள்ளது. அது மிகவும் அருமையாகவுள்ளது. ஒரு நல்ல கதை எழுதுங்க நாம பண்ணலாம். விஷ்ணு விஷால் உடன் இருந்தாலும் இன்னும் நன்றாக  தான் இருக்கும். ஐஸ்வர்யா லக்ஷ்மியின் நடிப்பும் அபாரமாக இருக்கிறது. உங்களுக்கு நல்ல ஒரு எதிர்காலம் உள்ளது. உதய் உங்களுக்கு இவ்வளவு நகைச்சுவை உணர்வு இருப்பது எனக்கு தெரியாது. இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு நன்றி" என பேசினார் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ரவி தேஜா.


 






 


ரஜினியுடன் விஷ்ணு விஷால் :


மல்யுத்தத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள 'கட்டா குஸ்தி' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் டிசம்பர் 2ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் அடுத்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து 'லால் சலாம்' படத்தில் நடிக்க உள்ளார்.