தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் தன் வாழ்க்கையில் மம்மூட்டி, மோகன்லால் செய்த மறக்க முடியாத சம்பவம் பற்றி நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
தயாரிப்பு மேலாளர், தயாரிப்பு நிர்வாகி, நடிகர், இணை தயாரிப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பி.எல்.தேனப்பன் ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம் (பி) லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பல வெற்றிப் படங்களை தயாரித்தார். அவர் நேர்காணல் ஒன்றில் தன் சினிமா வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை பற்றி பேசியிருப்பார். குறிப்பாக மலையாள சினிமா, நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் பற்றி பேசியதை காணலாம்.
- மம்மூட்டியிடம் தமிழ் சினிமாவில் இருக்கும் ஹீரோக்கள் மாதிரி பில்டப் எல்லாம் இருக்காது. எப்போது வேண்டுமானாலும் அவரை பார்க்கலாம், பேசலாம். ரொம்பவும் பழகுவதற்கு எளிமையானவர். தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களுக்கு எல்லாம் தனி கேரவன் கொடுக்கப்படுகிறது. அதற்கு ஒருநாள் வாடகை ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. அதன் உள்ளே பல வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. அவர்கள் ஷூட்டிங் இல்லை என்றால் அது சும்மாவே இருக்கும். அதுதான் ஹீரோக்களுக்கும், கேரவன் உரிமையாளர்களுக்கும் இடையேயான ஒப்பந்தம். ஆனால் மம்முட்டி அவரே சொந்தமாக கேரவன் ரெடி பண்ணி கொண்டு வருவாரு. அதற்கு கம்பெனியிடம் இருந்து எந்தவித பணமும் வாங்க மாட்டாரு. அந்த வண்டிக்கான டீசல் பணம் மட்டும் தான் வாங்குவாரு.
- நான் மோகன்லால் மகனை வைத்து ஒரு குழந்தைகள் படம் தயாரித்தேன். அது ரூ.8 முதல் ரூ.12 லட்சம் வரை செலவாகும் என சொன்னார்கள். சரி என சொல்லி மோகன்லாலிடம் அனுமதி வாங்கி ஷூட்டிங் நடத்தினோம். அந்த படத்துக்கு விருதுகள் கிடைத்தது. பின்னர் ஒருநாள் நான் மோகன்லாலை பார்க்க சென்றேன். அப்போது என் பையனை வச்சி படம் எடுத்தியே உனக்கு லாபம் கிடைச்சிதா என கேட்டார்கள்.
- பணம் எல்லாம் வரவில்லை என சொன்னேன். சேட்டிலைட் விற்கவில்லையா என கேட்டார். இல்லை நான் சில சேனல்களிடம் கேட்டேன். உடனே சம்பந்தப்பட்ட ஒரு சேனலுக்கு போன் செய்து பயங்கரமாக டென்ஷன் ஆனார். மறுநாள் காலை அந்த சேனலில் இருந்து செக்குடன் வந்து என்னை பார்த்தார்கள். அப்படி தன்னால் யாரும் நஷ்டம் அடைந்துவிடக்கூடாது என்பதில் மோகன்லால் கவனமாக இருந்தது மிகப்பெரிய விஷயம் என பி.எல்.தேனப்பன் தெரிவித்திருப்பார்.