உத்தரப்பிரதேசத்தில் குரங்கிடமிருந்து அலெக்ஸா மின்சாதன உதவியுடன் தப்பிய சிறுமிக்கு வேலை வழங்குவதாக தொழிலதிபர் ஆனந்த மஹிந்திரா அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகிதா என்ற 13 வயது சிறுமி தனது சகோதரியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்குள்ள அவாஸ் விகாஸ் காலனியில் அமைந்திருக்கும் அந்த வீட்டில் குடும்பத்தினர் வேறு ஒரு அறையில் இருந்தனர். சகோதரியின் ஒரு வயது மகளுடன் முதல் தளத்தில் இருந்த சமையலறை அருகே நிகிதா விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வீட்டுக்குள் குரங்கு ஒன்று நுழைந்துள்ளது,.
இதனை வீட்டில் யாரும் கவனிக்காத நிலையில் சமையலறை நோக்கி நகர்ந்த குரங்கு அங்கிருந்த பொருட்களை எல்லாம் தூக்கி வீச ஆரம்பித்துள்ளது. பின்னர் குழந்தையையும், நிகிதாவையும் நோக்கி வந்துள்ளது. என்ன நடக்கிறது என புரியாமல் குழந்தை அழ ஆரம்பித்துள்ளது. இதனால் என்னசெய்வதென்று புரியாமல் இருந்த நிகிதாவுக்கு சட்டென ஒரு யோசனை தோன்றியுள்ளது.
சமையலறை ஃப்ரிட்ஜ் மேல் அமேசானின் மின்சாதன பொருளான அலெக்ஸா இருந்துள்ளது. அந்த சாதனம் நாம் என்ன சொன்னாலும் அதன்படி பாடும், குரல் கொடுக்கும் என்பதால் நிகிதா குரங்கிடம் இருந்து தப்பிக்க நாய் போல குரைக்குமாறு சொன்னார். அலெக்ஸாவும் நாய் போல பயங்கர சத்தத்துடன் குரைத்துள்ளது. இதனைப் பார்த்து பயந்த குரங்கு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளது. நிகிதா கண நேரத்தில் எடுத்த முடிவு குழந்தை மற்றும் அவரின் உயிரை காப்பாற்றியுள்ளது.
இந்நிலையில் சிறுமி நிகிதாவின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இப்படி இருக்கையில், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில். “நமது சகாப்தத்தின் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், நாம் தொழில்நுட்பத்தின் அடிமைகளாகவோ அல்லது எஜமானர்களாகவோ இருப்போமா என்பதுதான். ஆனால் இந்த இளம் பெண்ணின் கதை, தொழில்நுட்பம் எப்போதும் மனித புத்திசாலித்தனத்தை செயல்படுத்தும் என்பதை தெரிவிப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது. அவளுடைய விரைவான சிந்தனை அசாதாரணமான ஒன்று. நிகிதா நிரூபித்தது உலகில் முற்றிலும் கணிக்க முடியாத தலைமைத்துவத்திற்கான பண்பாகும். அவர் படிப்பை முடித்த பிறகு, எப்போதாவது கார்ப்பரேட் உலகில் வேலை செய்ய முடிவு செய்தால், நாங்கள் அவருக்கு வேலை கொடுக்க தயாராக இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.