தமிழ்நாட்டு ஆளுநரிடம் மாட்டிக்கொண்டு முழிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான பரப்புரையானது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “இயற்கை அழகு கொஞ்சக்கூடிய புதுச்சேரிக்கு வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். புதுச்சேரி தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வைத்திலிங்கம் கை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு இந்த மாநிலத்தில் அறிமுகம் தேவையில்லை. புதுச்சேரியில் மக்கள் பணியாற்றி பாடுபட்டு உங்களுக்கு நன்கு அறிமுகமானவர்.
விடுதலை போராட்ட குடும்பத்தைச் சேர்ந்த வைத்திலிங்கம், தற்போது 2ஆம் விடுதலை போராட்டத்தில் வேட்பாளராக இருக்கிறார். 40 ஆண்டுகளாக காங்கிரஸ் பேரியக்கத்தோடு பயணிக்கக்கூடியவர். 8 முறை சட்டமன்ற உறுப்பினர். எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர், முதலமைச்சர், சட்டப்பேரவை தலைவர் என பழுத்த அரசியலுக்கு தொடர்புடையவர். புதுச்சேரியில் வைத்திலிங்கத்துக்கு வெற்றி உறுதியாகியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தை எப்படியெல்லாம் பின்னோக்கி கொண்டு செல்லலாம் என பாஜக செயல்படுகிறது. இதனை புதுச்சேரி மக்கள் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். வைத்திலிங்கம் சட்டப்பேரவை தலைவராக இருக்கும்போது துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி சட்டத்தை கேலி கூத்தாக்கும் செயலில் ஈடுபட்டார். மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தராமல் அதனை காரணம் காட்டி பல விஷயங்களை தடுத்தார். இப்படி தமிழ்நாட்டு ஆளுநர் ஒருவரிடம் மாட்டிக்கொண்டு நாங்கள் முழிக்கிறோம். அவரும் ஐபிஎஸ் ஆக இருந்தவர் தான். ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து ஆளுநராக இருக்கட்டும். அவர் திமுகவுக்கு பிரச்சாரம் செய்கிறார்.
பாஜக ஆளாதா மாநிலங்களில் ஆளுநரை வைத்து நெருக்கடி கொடுப்பதாக நினைக்காதீர்கள். புதுச்சேரியில் பாஜக கூட்டணியின் ஆளும் முதலமைச்சராக உள்ள ரங்கசாமிக்கும் ஏகப்பட்ட நெருக்கடிகள் உள்ளது. அதிகாரத்தை கைப்பற்ற பாஜக என்னவேண்டுமானாலும் செய்வார்கள். தமிழ்நாடு மாதிரி மாநிலமாக இருந்தால் அதனை முனிசிபாலிட்டியாக மாற்ற வேண்டும். புதுச்சேரி மாதிரி யூனியன் பிரதேசமாக இருந்தால் அதனை கிராம பஞ்சாயத்தாக மாற்றி மொத்தத்தில் டெல்லிக்கு கீழே எல்லாரும் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.
இதுதான் பாஜகவின் அஜெண்டா. அதனால் கூட்டணி அரசு இருந்தாலும் புதுச்சேரி மாநில அரசு வழங்காமல் கைப்பிடியில் வைத்துள்ளது. இந்த அவலம் தீர மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். மாநில, யூனியன் பிரதேச உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்று இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.