செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை”வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா , இன்று படக்குழுவினருடன் தமிழ்த்திரையுலகின் பல முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
"சிறை" திரைப்பட முன் வெளியீட்டு விழா
சிறை படத்தின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில் படைப்பின் மீதான பெரும் மகிழ்ச்சியில், பட வெளியீட்டுக்கு முன்னதாகவே செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio)* தயாரிப்பாளர் SS லலித் குமார் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி அவர்களுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கினார். இந்த நிகழ்வில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் பேசியதாவது
விஜயின் நன்றியை மறக்கமாட்டேன்
முதலில் திருப்பூர் சுப்பிரமணியன் அண்ணனுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன் அவரிடம் இரண்டு வருடங்களாக பேச வில்லை, ஆனால் நான் அழைத்தவுடன் எனக்காக நான் இல்லாமல் விழா நடக்குமா எனக் கேட்டு வந்தார். எஸ் ஏ சி சாரை சுப்பிரமணி அண்ணன் தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். இப்போது அவரது குடும்பத்தில் ஒருவனாக நான் இருக்கிறேன். கலைப்புலி தாணு, அம்மா சிவா, சுரேஷ் காமாட்சி என அனைவருக்கும் நன்றி.
சிறை ஒரு நிறைவான அனுபவம். முதன் முதலில் கதை கேட்ட போது, இயக்குநர் தமிழ் ஒரு ஒன் லைன் இருக்கிறது என்றார். அவர் சொல்லி முடித்தவுடன் இதில் என் பையனை நடிக்க வைக்கலாமா ? எனக்கேட்டேன், அவர் யோசித்துக் கொள்ளுங்கள் என்றார். இல்லை எனக்கு வெற்றிமாறன் படங்கள் பிடிக்கும் என் பையன் இந்த மாதிரி படத்தில் தான் அறிமுகமாக வேண்டும் என்றேன். பின் அவர் இயக்க முடியாத சூழலில் யாரை இயக்குநராக்கலாம் என்றபோது, சுரேஷை பரிந்துரைத்தார். வெற்றிமாறன் சாரிடம் கேட்டோம் தாராளமாகச் செய்யுங்கள் என வாழ்த்தினார். அடுத்து யாரை ஹீரோவாக போடலாம் என்ற போது, தமிழ் விக்ரம் பிரபு மட்டும் தான் இதற்குப் பொருத்தமானவர் என்றார். எடிட்டிங் பணிகளுக்கு பிலோமின் ராஜ் தான் வேண்டும் என்றேன், அவரும் சிறப்பாகச் செய்துள்ளார். மியூசிக் முதற்கொண்டு பிலோமின் மேற்பார்வையில் விட்டுவிட்டேன், இப்படத்தைத் தூக்கி நிறுத்தியது பிலோமின் தான். மாதேஷ் கேமரா அருமையாக செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியில் தெரிய ஒரே காரணம் விஜய் சார் தான். அவர் படம் மாஸ்டர் லியோ தான் எங்களுக்கு அடையாளம் அதை மறக்கவே மாட்டேன். இந்தப்படத்தை நீங்கள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பீர்கள் எனத் தெரியும் அனைவருக்கும் நன்றி.