சச்சின் படம் பெரிய அளவில் சென்றதாகவும், அப்படம் தோல்வி படமெல்லாம் இல்லை எனவும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு நேர்காணல் ஒன்றில் தெரிவித்ததை காணலாம்.
கடந்த 2005 ஆம் ஆண்டு ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய், ஜெனிலியா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் “சச்சின்”. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இப்படம் இளம் வயதினருக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாக உள்ளது.
நடிகர் விஜய் சாக்லேட் பாய் இமேஜில் இருந்து மாறி ஆக்ஷன் ஹீரோவாக படங்களில் நடித்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மீண்டும் சாக்லேட் பாய் கேரக்டரில் இப்படத்தில் நடித்திருப்பார்.
இப்படியான சச்சின் படம் பெரிய அளவில் ஓடவில்லை என கோலிவுட் வட்டாரத்தில் ஒரு தகவல் உண்டு. அதற்கு காரணம் இப்படம் நடிகர் ரஜினி நடித்த சந்திரமுகி, கமல்ஹாசன் நடித்த மும்பை எக்ஸ்பிரஸ் படங்களோடு நேருக்கு நேர் மோதியது. இதில் மும்பை எக்ஸ்பிரஸ் படுதோல்வி அடைய, சந்திரமுகி படம் 800 நாட்கள் ஓடியது. சச்சின் படம் சுமாரான வெற்றியை பெற்றதாக சொல்லப்பட்டது.
ஆனால், ஒரு நேர்காணலில் பேசிய தயாரிப்பாளர் தாணு, “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் கதையை கூட ராஜீவ் மேனன் விஜய்க்கு போய் சொன்னாரு. ஆனால் அவரிடம் அப்படத்துக்கான தேதிகள் இல்லாமல் இருந்தது. அதன்பிறகுதான் சச்சின் படம் அமைந்தது. அதற்கு முன்னால் வி.இசட்.துரையை தொட்டி ஜெயா படத்தின் கதையை சொல்ல சொன்னேன். அவர் முதல் பாதி சொல்லவும், நன்றாக இருக்கிறது. இரண்டாம் பாதியை டெவலப் பண்ணி கொண்டு வாங்க என சொல்லி அனுப்பினார். ஆனால் துரை அதில் தாமதம் செய்து விட்டார்.
இதற்கிடையில் தான் ஜான் சச்சின் கதையை விஜய்யிடம் சொன்னார். குஷி மாதிரி ஒரு படம் பண்ண வேண்டும் என அப்படம் எடுக்கப்பட்டது. சச்சின் ரொம்ப திருப்திகரமாக அமைந்தது. வடிவேலு - விஜய் காமெடிகள் இன்றும் சிறப்பாக உள்ளது. சச்சின் படம் 200 நாட்கள் ஓடியது. சந்திரமுகி படத்தின் கடைசி அரை மணி நேரம் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது உண்மைதான்.
அது புயல் மாதிரி வீசியது என்றால், சச்சின் தென்றல் மாதிரி தவழ்ந்தது. அப்படத்தால் எனக்கும், விநியோகதஸ்தர்களும் லாபம் தான் கிடைத்தது. படம் முடிந்த பிறகு நான் ஒரு பெரிய தொகையை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கொடுத்தேன். அவர் வாங்க மாட்டேன் என சொல்லிவிட்டார். நீங்க சம்பாத்தித்ததே போதும் என அவர் சொல்லி விட்டார்” என தெரிவித்துள்ளார்.