இயக்குநர் அமீர் சரியாக இருந்திருந்தால் அவரின் புத்திசாலித்தனத்துக்கு ஹாலிவுட்டில் படம் பண்ணப் போயிருப்பார் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். 


கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குநர் அமீர் இயக்கத்தில் ‘பருத்தி வீரன்’ படம் வெளியானது. இந்த படத்தின் மூலம் நடிகர் சிவகுமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி நடிகராக அறிமுகமானார். மேலும் ப்ரியாமணி, பொண்வண்ணன், சுஜாதா விஜயகுமார், சரவணன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். 


இப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. கார்த்தி இன்றைய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். கிட்டதட்ட 25 படங்களில் நடித்து முடித்து விட்டாலும் பருத்தி வீரன் படம் போல எதுவுமே இல்லை என சொல்லும் அளவுக்கு முதல் படத்திலேயே முத்திரை பதித்து விட்டார். இப்படியான நிலையில் சமீபத்தில் கார்த்தியின் 25வது படமான ஜப்பான் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு அவரின் படங்களை இயக்கிய இயக்குநர்களில் சிலர் வருகை தந்திருந்தனர். ஆனால் பருத்தி வீரன் கொடுத்த அமீர் வரவில்லை. இது மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறியது. 


இதுதொடர்பாக அமீரிடம் கேட்கப்பட்டபோது அவர், பருத்தி வீரன் படம் உருவாகும்போது நடைபெற்ற பிரச்சினைகளை வெளிப்படையாக தெரிவித்திருந்தார். கிட்டதட்ட தனக்கு ரூ.2 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் காரணம் எனவும் குற்றம் சாட்டியிருந்தார். 


இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஞானவேல் ராஜா பருத்தி வீரன் பட சமயத்தில் என்ன நடந்தது என தெரிவித்துள்ளார். அந்த நேர்காணலில், “அது 18 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். அமீருக்கு அவரே பிரச்சினை. அன்னைக்கு அமீர் என்னை, கார்த்தி, சிவகுமார் ஆகியோரை தாக்கி பேட்டி கொடுத்தார். 


ஆனால் அன்றைக்கு சிவகுமார் ஐயா என்னிடம் சொன்னதால் நான் எதுவும் திரும்ப பேசவில்லை. உலகத்துல தெரியாம தப்பு பண்ணவனை திருத்தலாம். தப்பாவே ஒருத்தர் இருக்கிறார் என்றால் என்ன முடியும்?. எல்லாரும் சேர்ந்தது தான் சினிமா. நான் (ஞானவேல் ராஜா) என் இயக்குநர்களை முழுவதுமாக நம்புவதால் தான் கதை கூட கேட்பதில்லை. ரூ.2.75 கோடி செலவில் ஆரம்பித்த பருத்தி வீரன் படத்தின் செலவு கணக்கை தயாரிப்பாளர் சங்கத்தில் கேட்கிறார்கள். 


அமீரும் வந்து கணக்கு தாக்கல் செய்தார். பருத்தி வீரன் படத்தில் பிளாஷ்பேக் போர்ஷனில் பன்னிகள் இருக்கும் காட்சிகள் இருக்கும். கிட்டதட்ட 35 பன்னிகள் மட்டுமே ஃபிரேமில் இருக்கும் அந்த காட்சியில் 250 பன்னிகள் இருப்பதாக கணக்கு காட்டினார். அதில் Hide pigs, died pigs என எழுதியிருந்தார். அப்படி என்றால் என கேட்டதற்கு,  Hide pigs என்றால் ஃப்ரேமில் தெரியாத 100 பன்னிகள், ஷூட்டிங் நடந்த சமயத்தில் இறந்தது 70 பன்னிகள் என  died pigs என தெரிவித்திருந்தார். 


அமீருக்கு அந்த கணக்கு தான் தெரியும். அவர் சரியான மைண்ட் செட்டில் இருந்திருந்தால் பாலிவுட்டில் படம் பண்ணி, அமீருக்கு இருக்கு புத்திசாலித்தனத்துக்கு இன்னைக்கு ஹாலிவுட்டுக்கு சென்றிருப்பார். ஆனால் இருக்கும் இடத்திலேயே திருட வேண்டும். இருக்குறதுக்குள்ளேயே திருடணும். உழைத்தெல்லாம் சம்பாதிக்கக்கூடாது. எவனாவது மாட்டுனா அவனை வச்சு திருடணும்” என ஞானவேல் ராஜா சரமாரியாக விமர்சித்துள்ளார்.