சினிமாவில் ஹீரோவாக ஜெயிக்க வேண்டும் என தன் மகன் உதயா நஷ்டப்பட்ட கதையை தயாரிப்பாளரும், நடிகருமான ஏ.எல்.அழகப்பன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அதனைப் பற்றி காணலாம். 


தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக ஒரு காலத்தில் திகழ்ந்தவர் ஏ.எல்.அழகப்பன். 1998 ஆம் ஆண்டு இனி எல்லாம் சுகமே என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளரான அவர் திருநெல்வேலி, கலகலப்பு, சைவம், இது என்ன மாயம், ஒருநாள் இரவில், சம்டைம்ஸ், வனமகன் என சில படங்களை மட்டுமே தயாரித்தார். இவருக்கு உதயா, விஜய் என இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் உதயா பிரபு நடித்த திருநெல்வேலி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கலகலப்பு, உன்னை கண் தேடுதே, பூவா தலையா, ரா ரா, ஆவி குமார், உத்தரவு மகாராஜா, மாநாடு, தலைவா என பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். 25 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் உதயா தனக்கென தனியிடம் பிடிக்க போராடி வருகிறார். 


அதேசமயம் ஈசன் படம் மூலம் ஏ.எல்.அழகப்பன் நடிகரானார். தொடர்ந்து நெருங்கி வா முத்தமிடாதே, திரி, பரமபதம் விளையாட்டு, துணிவு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் நேர்காணல் ஒன்றில் தன் மகன் உதயாவால் நஷ்டப்பட்டதை பற்றி பேசியுள்ளார். 


அதாவது, “நான் மார்க்கெட்டில் இருக்க காரணமே என்னுடைய பசங்க தான். இல்லாவிட்டால் ஏதாவது வட்டிக் கடைசியில் கணக்கு எழுதிக் கொண்டிருப்பேன், கலகலப்புக்கு பிறகு நான் என்னுடைய சொந்த பேனரில் படம் எடுக்கவில்லை. மூத்தவன் உதயா ஒவ்வொரு படமும் எடுத்து நஷ்டப்பட்டு கொண்டே இருந்தான். அவனுக்கு எப்படியாவது ஹீரோவாகி விட வேண்டும் என்கிற வெறி உள்ளது. நான் ரியல் எஸ்டேட்டில் சம்பாதிப்பை எல்லாம் அவன் காலி பண்ணி விடுகிறான்.


கடைசி 2 படத்துக்கு தரமாட்டேன் என சொல்லி விட்டேன். 2018ல் வெளியான உத்தரவு மகாராஜா பட ஆடியோ ரிலீசுக்கு போயிருக்கேன். அங்கே வந்திருந்த பிரபலங்கள் என்னை குறிப்பிட்டு இவர் யார் யாருக்குலாமோ பணம் கொடுக்கிறாரு..மகனுக்கு கொடுக்க மாட்டேங்குகிறார் என சொன்னார்கள். நான் மைக்கை வாங்கி திருநெல்வேலி படத்தில் இருந்து அத்தனை படத்துக்கு யார் மூலமாவது பணம் கொடுத்தது நான் தான். என் பையன் நல்லா இருக்கணும்ன்னு நான் நினைக்க மாட்டேன்னா?”  என ஏ.எல்.அழகப்பன் தெரிவித்திருப்பார். 


அதேசமயம் அவரின் மற்றொரு மகனான விஜய் தமிழில் கிரீடம், பொய் சொல்லப் போறோம், தலைவா, தெய்வ திருமகள், வனமகன், சைவம், தலைவி என ஏகப்பட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.