தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 (TNPSC-GROUP- I Prelims) முதல்நிலை தேர்விற்காக சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற்று வரும் இலவச பயிற்சி வகுப்புகளில் விருப்பமுள்ள தகுதி வாய்ந்தவர்கள் சேர்ந்து பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஐஜகடே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
’’தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள குரூப் – 1 (TNPSC-GROUP-I ) தேர்விற்கு 90 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 28.03.2024 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி இளநிலைப் பட்டப்படிப்பு ஆகும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1-ற்கான முதல்நிலை தேர்விற்கு இலவசp பயிற்சி வகுப்புகள், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் 22-05-2024 முதல் (திங்கள் முதல் வெள்ளி வரை) நடத்தப்பட்டு வருகின்றன.
பயிற்சி வகுப்பில் இணைவது எப்படி?
இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள், தேர்விற்கு விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்ப நகல், தங்களது ஆதார் அட்டையின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சென்னை - 32, கிண்டி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக அலுவலக வேலை நாட்களில் அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும், விவரங்களுக்கு, decgc.chennai24@gmail.com என்ற மின்னஞ்சலில்தொடர்பு கொள்ளலாம்.
சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.’’
இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள்
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்தத் தேர்வுகள் மூலம் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டு, அரசுப் பணிகளில் நியமனம் செய்யப்படுகின்றனர்.
அந்த வகையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி குரூப் 4 தேர்வுகள் ஜூன் 9ஆம் தேதி நடைபெற உள்ளன. குரூப் 2, 2ஏ தேர்வுகள் செப்டம்பர் 28ஆம் தேதியும் நடைபெற உள்ளன.
ஜூலை 13 குரூப் 1 தேர்வு
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு மார்ச் 28 முதல் ஏப்ரல் 27ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பித்தனர். குரூப் 1 தேர்வுக்கு 90 காலி இடங்கள் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
குரூப் 1 குறித்த முழுமையான அறிவிக்கையைக் காண https://www.tnpsc.gov.in/Document/english/04_2024_GRP1_ENG_.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது அவசியம்.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/