IND vs PAK T20 World Cup 2024: உலகமே எதிர்பார்க்கும் டி20 உலகக் கோப்பையானது இன்னும் 3 நாட்களில் தொடங்கவுள்ளது. அதிலும், இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் எப்போது நடைபெறும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மற்ற நாடுகளை போன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேரடியாக எந்த தொடரிலும் விளையாடுவது கிடையாது. கடைசியாக இந்த இரண்டு நாடுகளும் 2013ம் ஆண்டு இந்தியாவில் தொடரை விளையாடியது. இதன்பிறகு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பெரும்பாலும், ஐசிசி நடத்தும் ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன் டிராபி மற்றும் ஆசியக் கோப்பைகள் போன்ற முக்கிய போட்டிகளில் மட்டுமே மோதுகின்றன. அந்த போட்டிகளிலும் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறும்.
டி20 உலகக் கோப்பை 2024:
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக் கோப்பை 2024 போட்டியானது வருகின்ற ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி குறித்து ஒரு அச்சம் தரக்கூடிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கு தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் வந்துள்ளது. இருப்பினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு:
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இருந்தாலும், இந்த தீவிரவாத தாக்குதல் செய்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து, நாசாவ் கவுண்டி போலீஸ் கமிஷனர் பேட்ரிக் ரைடர், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெறும்போது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் வந்ததாக உறுதி செய்தார்.
நியூயார்க் ஆளுநர் விளக்கம்:
இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி குறித்து நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், ”கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான பாதுகாப்பு பணியில் எங்களது பாதுகாப்பு குழு மற்றும் சட்ட அதிகாரிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். போட்டியில் கலந்து கொள்ளும் மக்களின் பாதுகாப்பில் நாங்கள் முழு கவனம் செலுத்துவோம்” என தெரிவித்திருந்தார்.
2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தங்கள் போட்டியை பெரும்பாலும் நியூயார்க் நகரத்தில் நாசாவ் கவுண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் விளையாடுகிறது. வருகின்ற ஜூன் 1ம் தேதி இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்திய அணியின் முதல் ஆட்டம் ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்துக்கு எதிராக நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து ஜூன் 9ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் நியூயார்க் நகரத்தில் உள்ள நாசாவ் கவுண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மட்டுமே நடைபெறுகிறது.