நெல்லையில் கவின் ஆணவப்படுகொலை சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் ஆணவக்கொலைக்கு எதிராக சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் தோழமைக் கட்சிகளும் நேற்று முதல்வரை சந்தித்து இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினர். அதேபோன்று  யூடியூபில் பரிதாபங்கள் சேனல் மூலம் சமூக கருத்துக்களை காமெடியாக ரசிக்கும் படியாக சொல்வதில் தனித்துவம் பெற்றவர்கள் கோபி மற்றும் சுதாகர். இவர்கள் கவின் ஆணவப்படுகொலை  செய்யப்பட்டதை கண்டித்து பரிதாபங்கள் சேனலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டனர். 

சோஷியல் பரிதாபங்கள் என்ற பெயரில் வெளியான இந்த வீடியோவில் சாதி வெறியர்களால் இளைஞர்கள் எவ்வாறு மூளைச்சலவை செய்ப்படுகிறார்கள். சாதி ரீதியாக ஆணவப்படுகொலை செய்பவர்களை கண்டிக்கும் விதமாக அமைந்தது. குறிப்பாக சாதியை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு சாட்டையடி கொடுக்கும் வகையில் கன்டென்ட் தரமானதாக இருந்தது என பலரும் பாராட்டினர். கவின் கொலையை வெளிப்படையாக பேசியிருந்தனர். மேலும், படித்த இளைஞர்களை சாதியவாதிகள் எப்படி கொலையாளியாக மாற்றுகிறார்கள் என்பதையும் மிகவும் தத்ரூபமாக கோபி - சுதாகர் காட்சிப்படுத்தியிருந்தனர். 

கல்வியால் ஒரு சமூகம் முன்னேற வேண்டும் அதை விடுத்து சாதியால் எதுவும் கிடைக்கப் போவது இல்லை. திருந்துங்கள் இல்லையேல் இப்படித்தான் வாழ்க்கையை இழந்து சிறைக்கு செல்ல நேரிடும் என்றும் வெளிப்படையாக அரசியல் பாடம் எடுத்திருந்தனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். காேபி - சுதாகருக்கு மிகச்சிறந்த வாழ்த்துகள் என்றும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எம்.செளத்ரி கோபி - சுதாகர் வீடியோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்து பேசியுள்ளார். இவர் தேசியத் தலைவர் என்ற படத்தை தயாரித்திருக்கிறார். 

அவர் வெளியிட்ட வீடியோவில், யூடியூப் காமெடி வீடியோக்கள் போடுங்க அதை யார் கேட்டது. சமுதாய ரீதியாக கருத்து தெரிவிக்க கோபி, சுதாகருக்கு யார் உரிமை கொடுத்தது. குருபூஜையை பற்றி பேச இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. யார் போட்ட எலும்புத்துண்டுக்கு இந்த வீடியோ போட்டிங்க. எச்சை நாய்களா அறிவு வேண்டாம். சமூக பதற்றத்தை உருவாக்கும் வகையில் கேலி, கிண்டல் செய்துள்ளனர். சுர்ஜித் கைதால் நாங்க சோகத்தில் இருக்கிறோம். அவர் கொலையாளி ஆன வேதனையில் இருக்கிறோம். எவன் டிரைனிங் கொடுத்து லவ் பண்ண அனுப்புறான் அதை வீடியோவா போடனுமா இல்லையா? கோமாளி கோபி சுதாகர் போட்ட வீடியோவை டெலிட் பண்ண வேண்டும். இந்த வீடியோவை தான் தடை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.