திருப்பூர் மாவட்டம் எஸ்.ஐ சண்முகவேல் கொலையில் தொடர்புடைய முக்கியநபரான மணிகண்டனை பிடிக்க போலீசார் முயற்சி செய்த போது, தப்பிக்க முயன்ற மணிகண்டன் எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்
எஸ்.எஸ்.ஐ கொலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, குடும்ப தகராரை விசாரிக்க சென்ற சிறப்பு எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மடத்துக்குளம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனுக்குச் சொந்தமான ஒரு தோட்டத்தில் பணிபுரிந்து வந்த மூர்த்தி மற்றும் அவரது மகன்கள் தங்கப்பாண்டியன், மணிகண்டன் ஆகியோருக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டது. மதுபோதையில் ஏற்பட்ட சண்டையினால் அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அப்போது விசாரணையின் போது ஆத்திரம் அடைந்த மூர்த்தி மற்றும் அவரது மகன்கள், அரிவாளால் காவல் ஆய்வாளரை சரமாரியாக தாக்கி கொடூரமாக வெட்டிபடுகொலை செய்தனர். அருகில் இருந்த போலீஸ் வாகன ஓட்டுநர் அழகுராஜா சிறிது காயமடைந்தார்.
தீவிர தேடுதல் பணி:
இந்தக் கொலை சம்பவத்தை அடுத்து மாநிலம் முழுவதும் சோதனை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், ஐந்து தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டனர். டிஜிபி சசிமோகன் நேரில் சென்று சம்பவ நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், மூர்த்தி மற்றும் தங்கப்பாண்டியன் இருவரும் போலீசாரிடம் சரணடைந்தனர். ஆனால், மணிகண்டன் தலைமறைவாகவே இருந்தார்.
காலையில் கைது:
இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான மணிகண்டன், இன்று அதிகாலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் கைது செய்யப்பட்ட மணிகண்டனை, போலீசார் கொலை நடைபெற்ற இடத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
போலீஸ் எண்கவுண்டர்:
அப்போது திடீரென அவர் அங்கிருந்த அரிவாளை எடுத்து காவல் உதவி ஆய்வாளர் சரவணகுமாரை மணிகண்டன் தாக்கியுள்ளார். இதனால் போலீசார் தற்காப்பிற்காக மணிகண்டனை துப்பாக்கியால் சுட்டத்தில் காயமடைந்துள்ளார்.
அவரை உடுமலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். மணிகண்டனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் சரவணகுமார் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
விளக்கம் அளிக்கபடும்:
இந்த எண்கவுண்டர் சம்பவம் தொடர்பாக பேசி உள்ள மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மணிகண்டன் போலீசாரை தாக்க முயன்றதால் துப்பாக்கி சூடு நடந்திருக்கிறது. சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறோம். விரைவில் இது தொடர்பாக முழு விளக்கம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.