சென்னை ரிப்பன் மாளிகை முன்பு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தூய்மைப்பணியாளர்கல் கடந்த 7 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது கோரிக்கையை அரசு செவி கொடுத்து கேட்பதாக தெரியவில்லை. அமைச்சர் நேரு நேற்று பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. மழை வெயில் என்று பாராமல் தூய்மை பணியாளர்களின் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், அவர்களது போராட்டத்திற்கு சினிமா பிரபல பின்னணி பாடகி சின்மயி ஆதரவு தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

சென்னை மாநகராட்சியில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.விக.நகர் ஆகிய மண்டலங்கள் மற்றும் அண்ணாநகர், அம்பத்தூர் மண்டலங்களில் சில வார்டுகள் தவிர மற்ற பகுதிகளில் தூய்மைப்பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய 5 மண்டலங்களில் மாநகராட்சி நிரந்தரப்பணியாளர்கள் மற்றும் என்யூஎல்எம் திட்டத்தின் கீழ் ஒப்பந்தப் பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், இப்பகுதியை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. இதனால், ஊதிய குறைப்பு, வேலை இழப்பு, பணி பாதுகாப்பின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும் சூழல் உள்ளது. 

அரசு தனியாரிடம் விடுவதை கண்டித்தும் பணி நிரந்தரம் கோரியும்  தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நகரின் பல்வேறு இடங்களில் குப்பைகள் தேங்கி தூர்நாற்றம் வீசி வருகிறது. பல இடங்களில் சுகாதார கேடு விளைவிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், பின்னணி பாடகி சின்மயி தூய்மைப்பணியாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

சினிமாவை தாண்டி சமூக அக்கறையுடன் செயல்படுபவர் பாடகி சின்மயி. சினிமாவில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் ரீதியான பிரச்னைகளுக்கு சமூகவலைதளங்களில் மீ டூ மூலம் புகார் அளித்து வருகிறார். இதில் பலரும் சிக்கியுள்ளனர். ரிப்பன் மாளிகையில் போராடும் தூய்மைப்பணியாளர்களுக்கு தண்ணீர் தேவை ஏற்பட்டுள்ளது. 500 லிட்டர் தண்ணீர் பாட்டிலுடன் சின்மயி போராட்டகளத்திற்கு வந்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார். தற்போது இதுதொடர்பான புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.  இதன் மூலம் பாடகி சின்மயி அரசியலில் களம் காண இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், விஜய் தொடங்கியுள்ள தவெக கட்சியில் இணைந்து மக்களின் பிரச்னைக்கு குரல் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது.