அனைத்துத் துறைகளிலும் பாலியல் தொல்லை இருப்பதாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். 


மக்கள் மத்தியில் செய்தி வாசிப்பாளராக  அறிமுகமான நடிகை பிரியா பவானி ஷங்கர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு வைபவ் நடித்த மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். அவரின் ஹோம்லி லுக் பிளஸ் பாய்ண்ட் ஆக அமைந்தது. 


இதனைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மாஃபியா, மான்ஸ்டர், யானை, அகிலன், திருச்சிற்றம்பலம், ஓ மணப்பெண்ணே, ருத்ரன், ஹாஸ்டல், பத்து தல உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது பொம்மை, இந்தியன் 2, டிமாண்டி காலனி 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் பொம்மை படம் நாளை மறுநாள் (ஜூன் 16) தியேட்டரில் வெளியாகிறது. ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில்  எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர், சாந்தினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.


யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தில் ‘பொம்மை’ கேரக்டரில் பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இதனிடையே ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், திரையுலகம் மட்டுமின்றி எல்லா தொழில்களிலும் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அதில், “முக்கிய விஷயம் என்னவென்றால், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் பேச வேண்டும். அதைவிட சமூகம் அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்.


அதைவிட்டு பாதிக்கப்பட்டவர்களிடம், ‘நீங்கள் ஏன் இதற்கு முன்னால் பேசவில்லை போன்ற கேள்விகளைக் கேட்காமல் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்’. இந்தியாவில் எல்லா இடங்களிலும், தொழில்களிலும் பெண்கள் இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.  பெண்கள் தங்கள் அனுபவங்களைப் பற்றி பேசும்போதும், அவர்கள் சொல்வதைக் கேட்கும்போதும் நாம் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.பாதிக்கப்பட்டவர்களைக் குறை கூறுவதை நிறுத்த வேண்டும்’ என பிரியா கூறியுள்ளார். 


மேலும் படிக்க: Senthil Balaji Arrest: ரத்தக்குழாயில் 3 அடைப்புகள்.. செந்தில் பாலாஜிக்கு விரைவில் பைபாஸ் சர்ஜரியா..? மருத்துவ குழு சொன்னது என்ன?