ஆடு ஜீவிதம் படத்தில் இருந்து சென்சார் வாரியம் சில காட்சிகளை நீக்கியுள்ளதாக படத்தின் இயக்குநர் பிளெஸ்ஸி தெரிவித்துள்ளார்.


ஆடு ஜீவிதம்


பிருத்விராஜ் நடித்துள்ள ஆடு ஜீவிதம் படம் திரையரங்களில் நேற்று மார்ச் 28 ஆம் தேதி வெளியானது. சினிமா ரசிகர்கள் இப்படத்தைப் பார்த்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பிருத்விராஜின் நடிப்பு அனைவராலும் பாராட்டப் பட்டாலும் மொத்தமாக படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்துள்ளன. இதற்கு ரசிகர்கள் தரப்பில் ஒரு சில காரணங்கள் முன்வைக்கப் படுகின்றன. 


என்ன மைனஸ்? எது ப்ளஸ்?


மலையாளத்தில் பென்யமின் எழுதிய புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் ஆடு ஜீவிதம். இந்த புத்தகத்தை படித்தவர்கள் தரப்பில் இருந்து முன்வைக்கப்படும் விமர்சனங்கள் பின்வரும் இவை..


புத்தகத்தில் இடம்பெற்ற நிறைய காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை. இதனால் படத்தின் அனுபவம் சுருங்கிவிடுகிறது. நஜீபின் மன ஓட்டங்களோ அல்லது அவனது அக வயமான உரையாடல்கள் எதுவும் படத்தில் பெரிதாக காட்டப் படவில்லை. இந்த ஒட்டுமொத்த நாவலின் பலமாக கருதப்படுவது நஜீபின் மனதிற்குள் நடக்கும் உரையாடல்களே.


படத்தில் நஜீப் தனது மனைவியைப் பற்றி, நாவல் முழுவதும் நினைத்து பார்த்தபடியே இருக்கிறான். ஆனால் படத்தில் அமலா பால் ஒரு சில காட்சிகள் மட்டுமே வருகிறார்.






புத்தகம் படித்தவர்களின் விமர்சனம் ஒருபக்கம் என்றால் நேரடியாக படத்தைப்  பார்த்தவர்களின் விமர்சனம்  நஜீபின் துன்பத்தை மிகைப்படுத்தி பார்வையாளர்களின் கழிவிரக்கத்தை கோரும் வகையில் இருப்பதுதான். இப்படி திரைக்கதையில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த விமர்சனங்களுக்கு சென்சார் வாரியமும் ஒரு விதத்தில் காரணம் என்கிறார் பிளெஸ்ஸி. ஆடு ஜீவிதம் நாவலில் நஜீப் தனது பாலியல் வேட்கைகளை எதிர்கொள்வதும் மிக விரிவாக பேசப்படுள்ளது. ஆனால் படத்தில் அப்படியான எந்த இடமும் காட்டப்படவில்லை. இது தொடர்பாக படத்தின் இயக்குநர் பிளெஸ்ஸியின் பேட்டி ஒன்றில் அந்த காட்சிகளை தாங்கள் எடுத்திருந்ததாகவும் சென்சார் வாரியம் அந்தக் காட்சிகளை படத்தில்  வைக்க அனுமதிக்காததால் ஒரு சில காட்சிகளை நீக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.


ஒரு மனிதனின் நிஜ வாழ்க்கையில் நடந்த போராட்டத்தை சித்தரிக்கும்போது, உள்ளதை உள்ளபடியே தான் காட்ட முடியும் என்பது அடிப்படை அறிவு. சென்சார் வாரியத்தின் பழமையான சிந்தனைகளால் ஒரு நல்ல படத்தில் மூலமாக கிடைக்க வேண்டிய முழுமையான அனுபவம் பார்வையாளர்களுக்கு இல்லாமல் போகிறது என்னும் விமர்சனங்கள் எழுகிறது.