தென்னிந்திய சினிமாவின் வெற்றிக்கு மலையாளத் திரையுலகின் பங்களிப்பு மிகவும் பெரியது. பல வித்தியாசமான திரைக்கதைகளை கொடுப்பதில் மலையாளத் திரையுலகமே முன்னணி வகித்து வருகிறது என்றால் அது மிகையல்ல. அதிலும் குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு மலையாள சினிமாவின் வளர்ச்சி பல மடங்கு அதிகரித்துள்ளது. அதற்கு ஓடிடியின் வளர்ச்சியும் மிக முக்கியமானது. அந்த வகையில் 2024ம் ஆண்டு துவங்கிய நாள் முதல் மலையாள திரையுலகில் அடுத்தடுத்து வெற்றி படங்கள் வெளியாகி கேரளாவில் மட்டுமின்றி தமிழ் திரை ரசிகர்கள் மத்தியிலும் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. 


அந்த வகையில் ஃபீல் குட் ஜானரில் வெளியான பிரேமலு, மம்மூட்டி நடிப்பில் ஹாரர் ஜானரில் வெளியான பிரம்மயுகம் படங்கள் சக்கைபோடு போட்டு வந்த நிலையில், சமீபத்தில் வெளியான 'மஞ்சுமெல் பாய்ஸ்' விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் பின்னி பெடலெடுத்து வருகிறது.  தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்ற 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் கிட்டத்தட்ட 50 கோடி வரை வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


 



 


அடுத்த ஒரு மாபெரும் வெற்றியைக் கொடுப்பதற்காக தயாராக இருக்குறது இயக்குநர் பிளஸ்ஸி இயக்கத்தில் நடிகர் பிருத்விராஜ், வினீத் ஸ்ரீனிவாசன், அமலா பால், ஜிம்மி ஜீன் உள்ளிட்டோரின் நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக பான் இந்தியன் படமாக உருவாகியுள்ள 'ஆடுஜீவிதம்' திரைப்படம். வரும் மார்ச் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். 


2008ம் ஆண்டு இப்படத்தின் கதையை இயக்குநர் பிளஸ்ஸி தொடங்கியதாக நடிகர் பிருத்விராஜுக்கு கூறியுள்ளார். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு 2018ம் தான் தொடங்கியது. இந்த 10 ஆண்டுகள் இடைவெளியில் சினிமா பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. அந்த வகையில் இப்படம் பெரிய அளவில் பிரமாண்டமாக உருவாகி உள்ளது.


தமிழ் நடிகர்கள் எப்படி அவர்களின் வாழ்நாளில் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படமாவது நடித்து விட வேண்டும் என ஏங்குகிறார்களோ அதே போல மலையாளத்தில் தரமான படைப்புக்களை மட்டுமே கொடுத்துள்ள இயக்குநர் பிளெஸ்ஸி படத்தில் நடித்து விட வேண்டும் என்பது தான் மலையாளத் திரையுலக நடிகர்களின் கனவாக இருக்கும். அந்த வகையில் 'ஆடுஜீவிதம்' படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பிருத்விராஜ், கேரளாவில் தமிழ் சினிமாவுக்கு இருக்கும் வரவேற்பு குறித்து பேசி இருந்தார்.  


 



“சமீபத்தில் கேரளாவில் வெளியான லியோ, ஜெயிலர் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியான போது சாமானிய மக்களுக்கு 20 - 30 நாட்கள் வரை டிக்கெட் கூட கிடைக்கவில்லை. மலையாளத் திரைப்படம் தமிழ்நாட்டில் பெரிய அளவில் பேசப்படுவது உங்களுக்கு வேண்டுமாலும் பெரிய விஷயமாக இருக்கலாம். ஆனால் கேரளாவை பொறுத்த வரையில் தமிழ் சினிமா சூப்பர் டூப்பர் ஹிட் அடிப்பது பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஒன்றுதான். தமிழ் சினிமா கேரளாவிலும், மலையாள சினிமா தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பை பெறுவது எவ்வளவு ஒரு நல்ல விஷயம். 


மலையாள திரையுலகம் நல்ல கன்டென்ட் கொண்ட படங்களை அடுத்தடுத்து கொடுத்து வருகிறது. அதில் நானும் ஒருவனாக இருப்பதில் மகிழ்ச்சி என்றாலும் தமிழ் சினிமாவிலும் மிக நல்ல நல்ல படைப்பாளிகள் இருக்கிறார்கள். வெற்றிமாறன், மாரி செல்வராஜ், பா. ரஞ்சித், ஷங்கர், அட்லீ இப்படி ஏராளமான திறமைமிக்க தரமான இயக்குநர்கள் இருக்கிறார்கள்” என தமிழ் சினிமா பற்றி பெருமையாக பேசி உள்ளார் நடிகர் பிருத்விராஜ்.