18-வது நாடாளுமன்றத்தினை அமைப்பதற்காக பொதுத் தேர்தல்- 2024 தமிழகத்தில் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், எண்.06 காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் 19.04.2024 அன்று நடைபெற உள்ளது.
வேட்பு மனு பெறுதல் :-
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முதல் தளத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அறையில், எண்.06. காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரால் பெற்றுக் கொள்ளப்படும்.
வாக்காளர்கள் விவரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13,35.477 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 6,48,934, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 6.84,430 மற்றும் மூன்றாம் பாலினம் வாக்காளர்கள் எண்ணிக்கை 183 ஆகும். (எண்.06. காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1023,585 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 4,97,386 பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 5,26,013 மற்றும் மூன்றாம் பாலினம் வாக்காளர்கள் எண்ணிக்கை 304 ஆகும்).
வாக்குச்சாவடிகள் விவரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் 1417 வாக்குச்சாவடிகளும், 539 வாக்குச்சாவடிஅமைவிடங்களும் உள்ளன. இவற்றில் 178 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் (Vulnerable) கண்டறியப்பட்டுள்ளன. மேற்கண்ட பதட்டமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் நாளன்று நடக்கும் அனைத்து நடைமுறைகளும் சி.சி.டி.வி மூலம் நேரடியாக மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளில் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் நாளின்போது வாக்குப்பதிவுக்கான பொருட்களை வழங்குவதற்காக 04 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்ந்தார் போல் 127 மண்டல குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மண்டல குழுக்களில் ஒரு மண்டல அலுவலர், உதவி மண்டல அலுவலர் மற்றும் உதவியாளர் ஆகியோர் இடம்பெற்றிருப்பர். இவர் வாக்குச்சாவடி நிலை அலுவலர் மற்றும் இதர வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்துவார்.
வாக்குச்சாவடி அலுவலர்கள்:-
எண்.06. காஞ்சிபுரம் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6708 அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தும் நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள்:-
எண்.06. காஞ்சிபுரம் பாராளுமன்ற தேர்தலுக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்காக மொத்தம் 5572 வாக்குப்பதிவு கருவிகளும் (Ballot Units), 2263 கட்டுப்பாட்டுக் கருவிகளும் (Control Unit) மற்றும் 1945 யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் கருவியும் (VVPAT) பயன்படுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணைய உத்திரவின்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் கருவி (VVPAT) ஆகியன குறித்து பொதுமக்களிடையே விழிப்புண்வு ஏற்படுத்துவதற்காக அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் உள்ள பொதுஇடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து விழிப்புணர்வு மற்றும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
24 மணி நேரமும் கண்காணிப்பு
தேர்தல் நன்னடத்தை விதிகளை அமுல்படுத்துவதற்காக 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட முழுவதும் 12 பறக்கும்படை குழுக்கள் (Flying Squad Team) மற்றும் 12 நிலை கண்காணிப்பு குழுக்கள் (Static Surveillance Team), 4-காணொளி கண்காணிப்பு குழுக்களும் ( Video Surveillance Team), 4- காணொளி பார்வையாளர் குழுக்களும்(Video Viewing Team), வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிக்கும் பொருட்டு 4-உதவி செலவின பார்வையாளர் குழு (Assistant Expenditure Observer team) மற்றும் 4 உதவி கணக்கு தணிக்கை குழுக்கள் (Audit Accounting Teams) ஆகியன அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. பறக்கும்படை குழுவினர், காணொளி கண்காணிப்பு குழு மற்றும் நிலைகண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கு ஒவ்வொரு குழுவிற்கும் தனித்தனியாக வாகனவசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் பேரில், மேற்கண்ட வாகனங்களில் ஜி.பி.எஸ் (GPS) கருவி பொருத்தப்பட்டு, மேற்படி குழுவினரின் பணிகள் மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் நடைமுறை மற்றும் நடத்தை நெறிமுறை பணிகளை கண்காணிக்கும் பொருட்டு, ஒவ்வொரு பணிக்கும் துணை ஆட்சியர் நிலையில் ஒரு கண்காணிப்பு அலுவலர் (Nodal Officer)-ம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படை குழு, நிலை கண்காணிப்பு குழு, காணொளி கண்காணிப்பு குழு, உதவி செலவின பார்வையாளர் குழு, உதவி தணிக்கைக் குழு மற்றும் மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி மற்றும் ஆய்வுக் கூட்டங்கள் பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்டுள்ளது.
அனுமதி:-
வேட்பாளர்கள் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் தற்காலிக கட்சி அலுவலகம் அமைத்தல் போன்ற ஆறு வகையான இனங்களுக்கு அனுமதி பெறுவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் "Suvidha" என்ற இணையதள வழியிலான அனுமதி பெறும் நடைமுறையினை அறிமுகபடுத்தியுள்ளது. இந்த இணையதளத்தின் முகவரி "https://suvidha.eci.gov.in" ஆகும். வேட்பாளர்கள் மேற்கண்ட இணையதளத்தின் மூலம் விண்ணப்பம் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இந்த இணையத்தின் மூலம் அனுமதி பெறலாம்.
...