நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று, இந்தாண்டில் ஆறாவது முறையாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது பாஜகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து காரில் சாலை மர்க்கமாக பிரதமர் மோடி, சாய்பாபா காலனி பகுதிக்கு சென்றார்.


பிரதமர் மோடியின் ரோடு ஷோ


சாய்பாபா காலனி பகுதியில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ எனப்படும் வாகன அணிவகுப்பு பேரணி துவங்கியது. சாய்பாபா காலனி பகுதியில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை 2.5 கி.மீ. தூரத்திற்கு நடந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது திறந்த வாகனத்தில் வந்த பிரதமர் மோடி பொதுமக்களை சந்தித்தார். அப்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் அவரது வாகனத்தில் உடன் இருந்தனர். வழிநெடுக இருபுறமும் திரண்டிருந்த பாஜகவினர், கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். அப்போது திரண்டிருந்த பொதுமக்களை பார்த்து  பிரதமர் மோடி கையசைத்தும், வணக்கம் வைத்தும் உற்சாகப்படுத்தினார். வழிநெடுக திரண்டிருந்த மக்களில் பலர் மோடியை வரவேற்கும் வகையில் பதாகைகளையும், அவரது உருவப்படங்களையும் ஏந்தியபடி வரவேற்பு அளித்தனர்.



ஆர்.எஸ்.புரம் பகுதியில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி நிறைவடைந்தது. அங்கு கடந்த 1998ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி பந்தய சாலை பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று தங்கினார். பின்னர் இன்று காலை கோவை விமான நிலையத்திற்கு கார் மூலம் சாலை மார்க்கமாக சென்ற அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாலக்காடு செல்கிறார். பாலக்காட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சேலத்திற்கு செல்ல உள்ளார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். இந்தக் கூட்டத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.


சிறுவர்களுக்கு ஹனுமான் வேடம்


பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்க பாஜக சார்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த வகையில், சிறுவர்களுக்கு ராமன், சீதை மற்றும் ஹனுமன் வேடமணிந்து சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்தனர். அதோடு அவர்கள் அனைவருக்கும் பாஜக சின்னம் பொருந்திய அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டு இருந்தது, சில சிறுவர்கள் மோடியின் முக உருவம் கொண்ட முகமூடிகளையும் கையில் வைத்திருந்துள்ளனர். அதுமட்டுமின்றி, பிரதமர் மோடியை வரவேற்க அரசுப் பள்ளி மாணவர்களும் அழைத்துச் செல்லப்பட்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தேர்தல் தொடர்பான பரப்புரை, விளம்பரங்கள் உள்ளிட்ட எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் சிறுவர்களை பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரித்து உள்ளது. இதனை மீறிய பாஜகவிற்கு  பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  


இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள கோவை  மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடி, இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.