நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான கோல்டு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் & மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுப்ரியா மேனன் மற்றும் லிஸ்டன்ஸ் ஸ்டீபன் தயாரிப்பில் உருவான படம் “கோல்டு”. மலையாளத்தில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு  ராஜேஷ் முருகேசன் இசையமைத்த நிலையில்,  பிரேமம் எடுத்த அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்தார்.  நடிகர் பிரித்விராஜ், நடிகை நயன்தாரா இப்படத்தில் ஹீரோ, ஹீரோயினாக நடித்திருந்தார். 


ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் மாதமே வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த திரைப்படத்தின் பணிகள் முழுமை அடையாத காரணத்தினால், டிசம்பருக்கு ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.


 கோல்டு திரைப்படம் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்ற நிலையில்,  வரும் டிசம்பர் 29 ஆம் நாள் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.




 டிசம்பர் 1 அன்று மலையாளத்தில் வெளியான இப்படத்தின் தமிழ் டப்பிங் ரிலீசில் ஏதோ தடங்கல் ஏற்பட்டு அடுத்த நாளுக்கு (டிசம்பர் 2) தள்ளிப்போனது.


ரசிகர்களை ஏமாற்றிய கோல்டு 


பிரபல மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படத்தின் இயக்குநர் தான் அல்போன்ஸ் புத்திரன். மலையாளத் திரைப்படம் என்றாலும் கதையின் கருவிலும், நடிகர்களின் நடிப்பிலும் கொண்ட நேர்த்தியால் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்படம் பிரேமம். பிரேமம் திரைப்படம் நடிகை சாய் பல்லவியின் முதல் திரைப்படம் ஆகும். அதன்பின் அவரது மார்க்கெட் எங்கே சென்றது என்பது ஊரறிந்த உண்மை. அல்போன்ஸ் புத்திரனின் இயக்கம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது என்றே கூற வேண்டும்.






ஏழு வருடங்களுக்கு பிறகு வெளியான, அவரது அடுத்த இயக்கமான கோல்டு திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அந்த திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்த திரைப்படத்தில் பிரித்விராஜ் 'ஜோஷி' என்ற கதாபாத்திரத்தில் ஒரு செல்போன் கடை உரிமையாளராக நடித்திருப்பார்.


பல படங்கள் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெறும். ஆனால் ஓடிடியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாது. அதேபோல் சில படங்கள் திரையரங்குகளில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று விட்டு ஓடிடியில் ஹிட் அடித்து விடும். அதுபோல் கோல்டு திரைப்படத்தின் கதையில் என்ன நடக்கிறது என்பதை காத்திருந்து காண்போம். கோல்டு திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸைத் படக்குழுவினர்களும் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.