நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தொடர்ந்து 75 கர்ப்பிணி தாய்மார்களுக்கு பத்துக்கும் மேற்பட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் பொழுது, ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் இட்ட ஆணையின் படி 36 லட்சம் அங்கன்வாடி குழந்தைகளின் எடை மற்றும் உயரம் கணக்கெடுக்கப்பட்டு அதில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, மிதமான ஊட்டச்சத்து குறைபாடு என 9 லட்சம் குழந்தைகள் கண்டறியப்பட்டனர்.
தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து:
அதன் மூலம் அவர்களின் தாய்மார்களுக்கு என்ன மாதிரியான உணவு கொடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு இரண்டு மாத காலம் வழங்கும் வகையிலான சிறப்பு இனிப்பு வகை ஒன்றை அறிமுகம் செய்து தமிழக முதலமைச்சர் உத்தரவுபடி மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 45,000 குழந்தைகள் இருதய ஓட்டை, காதுகேளாதவர் உள்ளிட்ட பாதிப்புகளுடன் இருக்கக்கூடியவர்களை கண்டறிந்து மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாய்மார்களாலேயே குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இருதய குறைபாடு, காது கேட்காமை போன்றவை கண்டறிய முடியாத நிலையில் அரசு கண்டறிந்து அவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கி வருகிறது. குழந்தை திருமணங்கள் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொலைபேசி மூலம் அரசுக்கு வரக்கூடிய குழந்தை திருமணம் தொடர்பான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 16 வயதுடையோர் செய்யும் திருமணங்களுக்கு நீதிமன்றம் மூலமாகவும் கவுன்சிலிங் மூலமாகவும் அறிவுரை வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
சத்துணவில் அழுகிய முட்டையா..?
சத்துணவு திட்டத்தில் அழுகிய முட்டை எந்த இடத்திலும் குழந்தைகளுக்கு விநியோகம் செய்யப்படவில்லை. தண்ணீரில் மிதக்கக்கூடிய முட்டைகள் மற்றும் அழுகிய முட்டைகளை திருப்பி அனுப்புவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து படம் எடுத்து பரப்பி வருகிறார்கள். அழுகிய முட்டைகளை திரும்பப்பெறும் பணி 96ம் ஆண்டு முதல் பின்பற்றப்படுகிறது. அதே நடைமுறைதான் இப்போதும் பயன்படுத்தப்படுகிறது. பாஜகவினர் கருப்புக் கொடி காட்ட முயன்று கைது செய்யப்பட்ட தகவல் செய்தியாளர்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பா.ஜ.க.வினர் பேசக்கூடாது என தெரிவித்தார்.