பிரின்ஸ் படத்தின் தோல்வியால் அப்படத்தை தமிழகத்தில் வெளியிட்ட விநியோகஸ்தருக்கு நடிகர் சிவகார்த்திகேயன், இழப்பீடு தொகை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 


தெலுங்கு திரைப்பட இயக்குனரான அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த "பிரின்ஸ்" திரைப்படம் தீபாவளி ரிலீஸாக கடந்தாண்டு அக்டோபர் 21 ஆம் தேதி வெளியானது. இப்படத்தில்  நடிகை மரியா, நடிகர் சத்யராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்த இப்படம் சிவாவின் முதல் தீபாவளி வெளியீடாக அமைந்ததால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. 






ஆனால் பெரும் எதிர்பார்ப்புடன் தியேட்டருக்கு சென்ற ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றமே மிஞ்சியது. காட்சிகள் ஒன்றும் ரசிக்கும்படி இல்லை என்றும் சகட்டுமேனிக்கு சமூக வலைத்தளங்களில் பிரின்ஸ் படம் குறித்து விமர்சனங்கள் எழுந்தது.  இதன் காரணமாக அடுத்த சில தினங்களிலேயே பல தியேட்டர்களில் பிரின்ஸ் படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது. இதனையடுத்து பிரின்ஸ் படம் ஓடிடி ரிலீஸாக நவம்பர் 25 ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியானது. 


இதனைத் தொடர்ந்து மாவீரன், அயலான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படம் மறக்க முடியாத தோல்வியாக அமைந்தது. இதனால் தனது அடுத்தப்படத்தில் மிக கவனமாக நடித்து வருகிறார். இதனிடையே பிரின்ஸ் படத்தின் தமிழக தியேட்டர் வெளியிட்டு உரிமையை பிரபல சினிமா பைனான்சியர் அன்பு செழியன் வாங்கியிருந்தார். ஆனால் பிரின்ஸ் படத்தால் அவருக்கு ரூ.12 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. 






இந்நிலையில் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தை தயாரித்த நிறுவனத்துடன் இணைந்து நஷ்டத்தொகையில் 50 சதவிகிதமான ரூ.6 கோடியை  விநியோகஸ்தருக்கு திருப்பி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.