பாலிவுட்டின் பிரபல நடிகை சன்னிலியோன். இவருக்கு என்று இந்தியா முழுவதும் தீவிர ரசிகர்கள் உள்ளனர். இவர் பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் உள்பட பலரின் படங்களிலும் குத்துப்பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளார். தமிழில் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் இவரது நடனத்தில் “மதுபான் மெயின் ராதிகா நசே” என்ற இந்தி ஆல்பம் பாடல் ஒன்று வெளியானது. பிரபல இசை நிறுவனமான சரிகமா நிறுவனம் அவர்களது அதிகாரப்பூர்வ யூ டியூப் பக்கத்தில் இந்த பாடலை வெளியிட்டிருந்தனர். இந்த பாடலுக்கு சன்னி லியோன் மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆடியுள்ளார்.
இந்த "மதுபான் மெயின் ராதிகா நசே" என்ற பாடல் 1960ம் ஆண்டு வெளியான கோகினூர் என்ற படத்தில் இடம்பெற்றது. பிரபல நடிகர் திலீப்குமார், பிரபல நடிகை மீனாகுமாரி இருவரும் இந்த பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார்கள். முகமது ராபி இசையில் வெளியான இந்த பாடல் அப்போது மாபெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதே பாடலை தற்போது சன்னிலியோன் நடனத்தில் ரீமேக் செய்து சரிகமா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த பாடலில் சன்னிலியோனின் நடனம் ஆபாசமாக இருப்பதால் இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்று உத்தரபிரதேசத்தில் உள்ள இந்து மத போதகர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், விரிந்தபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, சன்னிலியோனுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அவரது இந்த வீடியோ ஆல்பத்தை தடை செய்யாவிட்டால் நாங்கள் நீதிமன்றம் செல்வோம் என்றும் கூறியுள்ளனர். மேலும், இந்த வீடியோவை திரும்பப் பெற்று சன்னிலியோன் பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை அவரை இந்தியாவில் இருக்க அனுமதிக்கமாட்டோம் என்றும் கூறியுள்ளனர்.
அகில் பாரதிய தீர்த்த புரோகித் மகாசபாவின் தேசிய தலைவர் மகேஷ் பதக் கூறும்போது, இழிவான முறையில் இந்த பாடலை வழங்கியதால் சன்னி லியோன் இந்த புண்ணியபூமியின் கவுரவத்தை களங்கப்படுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார். இன்னும் சிலர் இந்த பாடலின் சன்னிலியோனின் நடன அசைவுகள் இந்து மதத்தை களங்கப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக விமர்சித்து வருகின்றனர்.
கடந்த 22-ந் தேதி வெளியான இந்த பாடலில் சன்னி லியோனுடன் கனிகா கபூரும் இணைந்து நடனம் ஆடியிருந்தார். ஷாரிப் மற்றும் டோஷி இணைந்து இசையமைத்துள்ளனர். கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்து இந்த ஆல்பத்தை இயக்கியுள்ளார். சன்னிலியோன் நடிக்கும் திரைப்படம் மற்றும் அவர் நடனம் ஆடும் பாடல்களுக்கு இந்து அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்