83 Movie Review: 1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்றதை வைத்து 83 படம் தயாராகி உள்ளது. மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையில், பெரிய திரையில் வெளியிட வேண்டுமென காத்திருந்து டிசம்பர் 24-ம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது 83. இப்படத்தின் ஸ்பெஷல் ஷோவை நேற்று மாலை பார்த்தோம். ரீல் கபில் தேவின் 83 எப்படி இருக்கிறது?

  


உத்வேகம், ஆச்சர்யம், எதிர்ப்பார்ப்பு, வெற்றி, தோல்வி, கொண்டாட்டம், ஏமாற்றம் என அனைத்து எமோஷன்களை உள்ளடக்கிய ஒரு சினிமா கதைக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் 1983 உலகக்கோப்பை பயணம். வரலாற்றில் அதிகம் கொண்டாடப்பட்ட, மக்களுக்கு பரிச்சயமான ஒரு கதையை மீண்டும் சினிமாவாக காட்சிப்படுத்தும்போது பெரும்பாலான இடங்களில் ‘சிக்சர்’ அடித்திருக்கிறார் இயக்குனர் கபீர் கான். தமிழில் டப்பிங் செய்யப்பட்ட காட்சியைதான் பார்த்தோம் என்றாலும், டப்பிங் படம் போன்ற ஃபீலிங்கை தராமல் இருந்தது படத்தின் ப்ளஸ். 


கபில் தேவ், கவாஸ்கர், ஸ்ரீகாந்த், மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் தெரிந்திடாத கிரிக்கெட் வீரர்களையும் மனதில் பதிய வைக்கும்படி படம் எடுக்கப்பட்டதற்கு நடிகர்களின் பங்கு மிக முக்கிய காரணம். ரன்வீர் சிங், தீபிகா படுகோன், போமன் இராணி, ஜீவா, தஹிர் ராஜ் பாசின், அம்மி விர்க், பங்கஜ் த்ரிபாதி என படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். குறிப்பாக, சீக்காவாக நடித்திருக்கும் ஜீவா அப்ளாஸ் வாங்குகிறார். ஒரு குறிப்பிட்ட காட்சியில், காமெடி, அழுகை என எமோஷன்கள் மாறி மாறி வந்தாலும் கச்சிதமாக நடித்திருக்கிறார்.  



திரைப்பட காட்சிகளும், 1983-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் நிஜ காட்சிகளும் அடுத்தடுத்து வரும்போது பார்ப்பதற்கு செயற்கையாக இல்லாமல், கனெக்ட் செய்யும் வகையில் இருப்பதற்கு காரணம் சிறப்பான எடிட்டிங். படத்தின் பின்னணி இசையமைத்த ஜூலியஸ் பாக்கியமும், பாடல்களுக்கு இசையமைத்த ப்ரீத்தமும், ஒளிப்பதிவாளர் அசீம் மிஷ்ராவும் நல்ல அவுட்புட்டிற்காக மெனக்கெட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. 


கபில் தேவ் என்ற ஒன் மேன் ஆர்மியின் அசராத நம்பிக்கைக்கும், முயற்சிக்கும் கிடைத்த வெற்றிக்கதையாக ஆரம்பத்தில் தெரிந்தாலும், ஒட்டுமொத்த இந்தியாவின் நம்பிக்கை கதையாக, வெற்றியாக மாறும் தருணங்கள் கண்டிப்பாக ‘புல்லரிக்க’ வைக்கும்! கிரிக்கெட் என்ற விளையாட்டு இந்தியாவில் ஏன் கொண்டாப்படுகிறது, மக்களின் இரத்தத்தில் எப்படி கலந்துபோனது என்பதற்கு காரணமான முக்கிய நிகழ்வை கிட்டத்தட்ட நிறைவாக காட்சிப்படுத்தி இருக்கின்றது படக்குழு.  


எமோஷன்களை தூக்கிவிட்டு, விளையாட்டை குறைத்து கொண்டு வெளியாகும் வழக்கமான ஸ்போர்ட்ஸ் டிராமாவில் இருக்கும் மைனஸ்களை தவிர்த்து, விளையாட்டை விளையாட்டாகவே காட்சிப்படுத்தி, எதார்த்தமான எமோஷன்களை மட்டும் காட்டி இரண்டரை மணி நேரத்தை ‘வொர்த்’ என சொல்ல வைக்கிறது 83! கபில் தேவின் 175*, ஸ்ரீகாந்த்தின் ஹோட்டல் பேச்சு, பேருந்து சீன், ஃபைனல் வின்னிங் மொமண்ட் என சில சூப்பர் காட்சிகளுக்காகவும், சில சர்ப்ரைஸ் மொமெண்ட்ஸ்களுக்காகவும் 83 திரைப்படத்தை தியேட்டரில் பார்க்கலாம்.