கி.மு-கிபி.,யில் தொடங்குகிறது கிறிஸ்து பிறப்பின் மகிமை! ஈராயிரம் ஆண்டுகளுக்குப் முன் இந்த பூமியில் அவதரித்த தேவ தூதன் இயேசு கிறிஸ்து, அமைதி, அன்பு, அரவணைப்பு அனைத்திற்கும் சொந்தக்காரர். அவர் பிறப்பே எளிமை. ஒரு ஆட்டுக் கொட்டத்தில் அவதரித்த அன்பின் அடைமொழி ஏசு!

நாசரேத்தின் கன்னி மரியாள்- யோசோப் ஜோடிக்கு திருமண ஒப்பந்தம் செய்திருந்தனர். கன்னி மரியாள், இறையருள் பெற்றவள். கடவுளின் தூதர் கபிரியேல் அவள் முன் தோன்றினார் என்றும், ‛அருள் நிறைந்த மரியாளே வாழ்க...  பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே...’ என்று கபிரியேல் கூறியதும், கலங்கிப் போனாள் மரியாள்! ‛கவலை வேண்டாம் மகளே... நீர் உன்னதமானவள்... ஆண்டவரின் பூரண அருளும் அன்பும் உன்னிடத்தில் நிறைந்திருக்கிறது... திருமணத்திற்கு முன்பே, உனக்கொரு மகன் பிறப்பான்; ஆண்டவர் அருளை பெற்ற அந்த தேவமகனுக்கு ஏசு என பெயரிடு; அவனே தேவனின் குழந்தை... இந்த உலகின் ரட்சகன்...’ என்று அருளாசி வழங்கியதாக கிறிஸ்தவ புராணங்கள் கூறுகிறது. 



‛கன்னியான எனக்கு குழந்தையா...’ என கலங்கினாள் மரியாள்! ‛கவலை வேண்டாம் மகளே...வருபவன் தூய்மையானவன்... தேவனின் மகன்...அவனை ஏந்திக் கொள்...’ என்றார் கபிரியல். அதை ஏற்றுக் கொண்டாள் மரியாள். திருமணத்திற்கு முன் கருவுற்றாள். இதை அறிந்த நீதிமான் யோசோப், மரியாளுக்கு கலங்கம் ஏற்படுத்தாமல், திருமண ஒப்பந்தத்தில் விலக முயற்சித்தார். அப்போது அவரது கனவில் வந்த கபிரியல், ‛தாவீதின் மகனே... மரியாளை ஏற்றுக்கொள்... அவர் புனித ஆவியால் கருவுற்றிருக்கிறாள்; மக்களை பாவங்களிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சி இது...’ என்றார், தூக்கத்திலிருந்து எழுந்த யோசோப், மரியாளை மனமுவந்து ஏற்றார். 

ஒரு நாள் மன்னர் அகஸ்டஸ் சீசர், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு உத்தரவிடுகிறார். தங்கள் பெயரை பதிவு செய்ய மனைவி மரியாளுடன் பெத்லகம் புறப்படுகிறார் யோசோப். பிரசவ காலம் நெருங்கிய சமயம் அது. திடீரென மரியாளுக்கு பிரசவ வலி; இடமின்றி ஒரு மாட்டுத் தொழுவத்தில் இறைமகனை பிரசவித்தார் மரியாள். 

ஏசு பிரான பூமியில் தடம் பதித்ததும், அதிகாரவர்க்கத்தின் அஸ்திவாரம் அடிப்போனது என்கிறது விவிலியம். பிறப்பே சோதனையும், வறுமையுமாய் வலிகளுடன் வந்தவர் பரமபிதா. 



அவர் பூமியில் செல்வந்தராய் வாழவில்லை. மேய்ப்பராய் மேக கூட்டமாய் நகர்ந்து கொண்டிருந்தார். 

பிறப்பு மட்டுமல்ல, இறப்பிலும் கூட அவர் துன்பங்களை மட்டுமே அனுபவித்தார். ஆனாலும் பிறரின் இன்பங்களுக்கு வழிகாட்டினார் என்பது தான் இயேசு பிறப்பின் மகிமை. மனிதராய் அவர் வலம் வந்த இந்த உலகில், அவர் நிறைய சிரமங்களை சந்தித்திருக்கிறார். அன்பு, துரோகம், எதிர்ப்பு, சித்திரவதை என சக மனிதன் சந்தித்த அத்தனையையும், அவரும் சந்தித்தார். இன்னும் சொல்ல வேண்டுமானால், மற்றவர்களை விட அதிகம் சந்தித்தார். ஆனால், அனைத்தையும் அன்பாலயே அவ்ர் அணுகினார். அவர் இந்த பூமியில் விதைக்க நினைத்ததும் அதுவே.



அவர் இறந்தாலும் எழுபவர். அவர் விதைத்த அன்பு மட்டும் எப்படி புதையும்? ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் இயேசு கிறிஸ்து பிறந்து கொண்டே இருக்கிறார். ஈராயிரம் ஆண்டுகளை கடந்தும் அவர் உயிர்த்துக் கொண்டே இருக்கிறார். இனிய கிறிஸ்துமஸ் பெருவிழாவை கொண்டாடும் இந்த நேரத்தில், அவர் காட்டிய அன்பின் வழியில் அனைவரும் மதங்களை கடந்து பயணிக்கலாம்!