கேஜிஎஃப் திரைப்படம் மூலம் உலகளவில் பிரபலமான ஒரு இயக்குநராக பிரபலமானவர் இயக்குநர் பிரஷாந்த் நீல். அவரின் இயக்கத்தில் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ரிலீசாக டிசம்பர் 22ம் தேதி திரையரங்குகளில்  வெளியான திரைப்படம் 'சலார்'. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் 175 கோடி வசூல் செய்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 


 



பிரஷாந்த் நீல் - பிரபாஸ் கூட்டணி :


கேஜிஎஃப் படத்திற்கு பிறகு பிரஷாந்த் நீல் இயக்கிய படம் 'சலார்' என்பதால் இந்திய அளவில் மட்டுமன்றி உலகளவில் உள்ள திரை ரசிகர்கள் இப்படத்தின் ரிலீசுக்காக ஆவலுடன் காத்து கொண்டு இருந்தனர். ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு, பிரஷாந்த் நீல் - பிரபாஸ் கூட்டணி என பல பிளஸ் பாயிண்ட்கள் இப்படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தன. 


முதல் படம் :


2014ம் ஆண்டு வெளியான 'உக்ரம்' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரஷாந்த் நீல். முதல் படத்திலேயே அனைவரின் கவனமும் பெற்றார். அதை தொடர்ந்து அவர் இயக்கிய கேஜிஎஃப் திரைப்படம் அவரை உலகளவில் பிரபலமாக்கியது. கேஜிஎஃப் 2 வெளியாகி ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தையே தூக்கி நிறுத்தியது. 


 



சின்னத்திரை டூ பான் இந்தியன் ஸ்டார் :


சின்னத்திரை நடிகராக இருந்த நடிகர் யாஷ், கேஜிஎஃப் படம் மூலம் முன்னணி நடிகராக உச்சத்திற்கு சென்று மாஸ் காட்டும் பான் இந்தியன் நடிகராக தனது அந்தஸ்தை உயர்த்தி கொண்டார். பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையை சிதறவிட்ட கேஜிஎஃப் 2 படம் மூலம் அவரின் லெவல் பன்மடங்கு எகிறிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.


மோசட் வான்டட் இயக்குநர் :


உக்ரம், கேஜிஎஃப், கேஜிஎஃப் 2 என மூன்றே படங்களின் மூலம் இன்றைய இளைய தலைமுறையினரின் விருப்பமான ஒரு இயக்குநராக கொண்டாடப்படுகிறார் பிரஷாந்த் நீல். அதை தொடர்ந்து வெளியாகியுள்ள 'சலார்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் 31வது படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


குடும்பத்தின் மீது கவனக்குறைவு :


சலார் படத்தால் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல் குறித்து சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். சலார் படத்தின் படப்பிடிப்பில் முழுமையாக ஈடுபட்டு இருந்ததால் தன்னுடைய குடும்பத்துடன் நேரம் செலவு செய்ய முடியாமல் போனது. குழந்தைகளுக்கு ஒரு நல்ல அப்பாவாகவும், என்னுடைய மனைவிக்கு ஒரு நல்ல கணவராகவும் என்னால் இருக்க முடியாமல் போனது. என்னுடைய குழந்தைகள் என்னை நினைத்து அழுதார்கள் என்றால் மட்டுமே அவர்களை  மூன்று மாதத்திற்கு ஒரு முறை சென்று பார்க்க வீட்டுக்கு சென்றதாகவும் தெரிவித்து இருந்தார்.