Kannedhirey Thondrinal: 1990களில் பெண்கள் விரும்பும் சால்கெட் பாயாக இருந்த பிரசாந்த் காதலையும், நட்பையும் தொடாமலும், விலகாமலும் தண்டவாளம் போல கடத்தி சென்ற படம் தான் கண்ணெதிரே தோன்றினாள். காதலை வெறுக்கும் நண்பனின் தங்கையை பிரசாந்த் கைப்பிடித்தாரா, இல்லையா? என்பதும், நட்பா..? காதலா..? என்பதை அழகாக கூறியிருக்கும் கண்ணெதிரே தோன்றினாள் படம் திரைக்கு வந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 


படத்தின் தொடக்கத்தில் ரயில் நிலையத்தில் ஹீரோயினான சிம்ரனை பார்த்ததும் காதல் கொள்கிறார் பிரசாந்த். பின்னர் கல்லூரியில் சேரும் பிரசாந்துடன், கரணிற்கு மோதல் ஏற்படுகிறது. மோதலில் தொடங்கி காதல் ஏற்படும் என்பார்கள். ஆனால், இந்த படத்தில் மோதலில் ஏற்படும் கரணின் அறிமுகம் பிரசாந்திற்கு நட்பாக மாறுகிறது. இருவரும் உயிருக்கு உயிரான நண்பர்களாக மாறுகின்றனர். இடைப்பட்ட நேரத்தில் பிரசாந்தை சந்தித்து பேசி பழகும் சிம்ரன் அவரை காதலிக்க தொடங்குகிறார். இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். 


ஒரு பக்கம் உயிர் நண்பன், மற்றொரு பக்கம் காதலி என இரண்டையும் சந்தோஷமாக அனுபவிக்கும் பிரசாந்திற்கு பேரிடியாய் வருகிறது நண்பனின் காதல் வெறுப்பு. கரணினின் மூத்த தங்கை காதலித்து வீட்டை விட்டு ஓடிவிடுவதால் குடும்பமே அவமானப்படுகிறது. இதனால் காதல் என்றால் வெறுப்பை காட்டி வருகிறார் கரண். இந்த சூழலில் தான் கரணின் இரண்டாவது தங்கையான சிம்ரன் பிரசாந்தை காதலிக்கிறார்.




கரணின் முதல் தங்கையின் காதலும், அதனால் கரண் காதலை வெறுப்பதை தெரிந்த பிரசாந்த் சிம்ரனை காதலை மறுத்து அவரை விட்டு விலக நினைக்கிறார். ஒரு பக்கம் நண்பன், மறுபக்கம் நண்பனின் தங்கையான தனது காதலி என தவிக்கும் பிரச்சந்தின் நடிப்பும், காதலுக்காக உயிர் விட துணியும் சிம்ரனின் நடிப்பும், துரோகம் வேறு - நட்பு வேறு என  வேறுப்படுத்தி பார்க்கும் கரணின் நடிப்பும் கண்ணெதிரே தோன்றினாள் படத்தை இன்றும் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. 


நட்பு, காதல் கதைக்கு ஏற்ப படத்தில் காமெடிக்கு பஞ்சமில்லை என்ற அளவுக்கு விவேக், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோரின் நடிப்பும் பேசப்பட்டது. கதைக்கு ஏற்ற எழுத்தாளர் சுஜாதாவின் வசனமும், தேவைக்கு மீறி எந்த கேரக்டரையும் மிகைப்படுத்தி பேசவிடவில்லை. இதேபோல், படத்திற்கு மற்றொரு பலமாக தேவாவின் பின்னணி இசை பின்னி பெடலெடுத்தது. நட்பை கொண்டாடும் ‘ஈஸ்வரா வானும் மண்ணும்’ என்ற பாடலும், சின்ன சின்ன கிளியே, சந்தா ஓ சந்தா, சலோமியா, கனவே கலையாதே போன்ற காதலை ரசிக்க வைக்கும் பாடல்களும், கொத்தால் சாவடி என்ற குத்தாட்ட பாடலும் ஒவ்வொரு ரசிகனையும் தாளம் போட வைத்தது. 


உயிருக்கு உயிரான நட்பு, உயிர் விட துணிந்த காதல், காமெடி, பாடல்கள் என அனைத்திலும் ஸ்கோர் செய்த கண்ணெதிரே தோன்றினாள் படத்தை இயக்குநர் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். 


மேலும் படிக்க: Thalaivar 171: "போட்றா வெடிய” .. லோகேஷ் கனகராஜூடன் கைகோர்க்கும் ரஜினிகாந்த்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!


AR Rahman: ‘இளையராஜாவை பார்த்து கொஞ்சம் கத்துக்கோங்க’... ஏ.ஆர்.ரஹ்மானை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!