இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சியில் ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், சமூக வலைத்தளங்களில் இளையராஜாவின் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. 


ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி


இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, தேவா, வித்யாசாகர், விஜய் ஆண்டனி ஆகியோரை தொடர்ந்து சென்னையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் பெய்த கனமழையால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தண்ணீர் தேங்கியது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்கள் ஒதுங்க கூட இடம் இல்லாததால் பெரும் அவதிப்பட்டனர். இதனால் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களுக்கு ஆறுதல் சொன்ன ரஹ்மான், நிகழ்ச்சி வேறொரு நாளில் நடக்கும் என அறிவித்தார். 


அதன்படி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில்  மறக்குமா இசை நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மழை வந்தாலும் ரசிகர்கள் சிரமப்படாதப்படி ஒருமுறை பயன்படுத்தும் ரெயின்கோர்ட் வழங்கப்படும் என்றெல்லாம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் இசை மழையில் நனைய தயாரான ரசிகர்களுக்கு அங்கு சென்றதும் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் முறைப்படி செய்யப்படாமல் இருந்தது. 


சமூக வலைத்தளங்களில் கொந்தளித்த ரசிகர்கள்






இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ACTC events நிறுவனம் செய்திருந்தது. அதன்படி மதியம் 3 மணி முதல் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இதனால் மதியமே ரசிகர்கள் கார்களிலும், பைக்குகளிலும் வர தொடங்கியதால் கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் கடுமையான ட்ராஃபிக் நெரிசல் ஏற்பட்டது. அவ்வழியாக செல்பவர்கள் ஓ.எம்.ஆர். சாலையை பயன்படுத்துமாறு போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு 4 மணி ஆகியும் கேட் திறக்கவில்லை என்றும், பார்க்கிங் குளறுபடிகளால் பல கி.மீ.,க்கு முன்னதாகவே வாகனங்களை நிறுத்தி விட்டு பலரும் நடந்தே சென்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல் பல ஆயிரம் கொடுத்தும் டிக்கெட் வாங்கியும் வாகன பார்க்கிங் கட்டணமும் வசூலிக்கப்பட்டதால் ரசிகர்கள் பெரும் அதிருப்திக்குள்ளாயினர். அதேபோல் உள்ளே, ப்ளாட்டினம், டைமண்ட், கோல்ட், சில்வர் என்ற அடிப்படையில் டிக்கெட் வழங்கப்பட்டிருந்த நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எந்த டிக்கெட் என்றே சரிபார்க்காமல் வந்தவர்களை அப்படியே உள்ளே அனுப்பியதாக புகார் எழுந்தது.


இதனால் உரிய டிக்கெட் இருந்தும் பலரால் நிகழ்ச்சியை பலரால் காண முடியவில்லை. இதனால் மனக்குமுறலோடு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். மேலும் தங்கள் ஆதங்கங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் சொல்லியே ஆக வேண்டும் என தெரிவித்துள்ளனர். 


வைரலாகும் இளையராஜா வீடியோ


இதனிடையே சத்தமே இல்லாமல் சமூக வலைத்தளத்தில் இளையராஜாவின் காணொளி ஒன்று பரவி வருகிறது. அதில் சில ஆண்டுகளுக்கு சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேடையில் நேரடியாக வந்த ரசிகர்கள் சிலரை அவர் விமர்சித்தார். அதாவது, ‘ரூ.500 டிக்கெட் வாங்கி கொண்டு ரூ.10 ஆயிரம் வாங்கியவர்கள் வரிசையில் வந்து அமர்ந்து இருக்கிறீர்கள். இப்படியென்றால் டிக்கெட் வாங்கியவர்கள் எங்கே போவார்கள். இது என் மீதான அன்பு தான் என புரிகிறது. அதுக்காக இப்படியா பண்ணுறது. என்னைத்தானே திட்டுவார்கள்’ என தெரிவித்திருந்தார்.