Thalaivar 171: நடிகர் ரஜினிகாந்த் (Rajnikanth) நடிக்கும் 171வது படத்தை (Thalaivar 171) இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj)  இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். இவரின் 169வது படமாக கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி ‘ஜெயிலர்’ படம் வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்தார். நெல்சல் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் படத்தில் தமன்னா, மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மிர்னா மேனன், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் ரஜினி கேரியரில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 


கிட்டதட்ட ரூ.600 கோடிக்கும்  மேல் வசூல் செய்த ஜெயிலர் படம் 30 நாட்களை கடந்தும் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதேசமயம் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி அமேசாம் பிரைம் ஓடிடி தளத்திலும் அப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் கேமியோ ரோலில் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லால் சலாம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் அவர் நடித்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீசாகவுள்ளது. 


இதற்கிடையில் ரஜினி தனது 170வது படத்தின் ஜெய் பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேலுடன் இணைகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ப்ரீ-புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் ஷூட்டிங் தொடங்கவுள்ள நிலையில், ரஜினி நடிக்கும் 171வது படத்தின் (Thalaivar 171) அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவருடன் இணைகிறார். 






சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டண்ட் மாஸ்டராக அன்பறிவ் செயல்படுவார் எனவும் இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் எந்திரன், பேட்ட, அண்ணாத்த, ஜெய்லர் ஆகிய படங்களை தொடர்ந்து 5வது முறையாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.