ஆப்கானிஸ்தான் குறித்து துணிச்சலான கருத்தைப் பதிவிட்டுள்ள நடிகை ப்ரணீதாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


தமிழ், தெலுங்கு எனப் பல மொழிகளில் நடித்த ஆர்ப்பாட்டம் இல்லாத அழகி என்று அறியப்பட்டவர் ப்ரணீதா. தமிழில் கடைசியாக ஜெமினி கணேசனும், சுருளி ராஜனும் என்ற படத்தில் நடித்திருந்தார். அண்மையில் இவர் தொழிலதிபர் ஒருவரை மணந்தார். அதன் பின்னர் சினிமாவில் இருந்து விலகியே இருக்கிறார். இருப்பினும் அவ்வப்போது சமூகவலைதளங்கள் ஏதேனும் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்.


இந்நிலையில், ஆப்கானிஸ்தான் குறித்து துணிச்சலான கருத்தைப் பதிவிட்டுள்ளதற்கு அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் வீழ்த்தப்பட்டு தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளது. இனி ஜனநாயகத்துக்கு இடமில்லை இனி எல்லாமே இஸ்லாமிய சட்டப்படி தான் நடக்கும். ஆப்கானிஸ்தானை இனி இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தான் என்று அழையுங்கள் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.


இந்நிலையில், இந்தியாவில் சிலர் தலிபான்கள் ஆட்சியை இந்து பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். இது குறித்து நடிகை ப்ரணீதா சுபாஷ் தனது சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.


ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியாவில் உள்ள சிலர், இந்து பயங்கரவாதத்தை சுட்டிக்காட்டி ஆப்கானிஸ்தானில் நடப்பதை பூசிமெழுகப் பார்க்கிறார்கள். தலிபான்கள் நடத்தையை நியாயப்படுத்தும் முயற்சி அவர்களின் கற்பனைக்கு வேண்டுமானால் சரியானதாக இருக்கலாம். பாரத தேசமே உனக்கு எதிரி எல்லை கடந்து இல்லை உள்ளுக்குள்ளேயே இதுபோன்றோரால் தான் இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.




ஏற்கெனவே, ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் இளம் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். பாலியல் அடிமைகளாக்கப் பட்டனர் என்ற செய்தி அச்சத்தைக் கடத்துகிறது. 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இருந்த ஐஎஸ்ஏஎஃப், சர்வதேச பாதுகாப்பு உதவிப் படைகள் (International Security Assistance Force ISAF) என்ன செய்து கொண்டிருந்தது? அப்பாவி மக்களைக் காப்பாற்ற முடியவில்லையே. ஆப்கன் மக்களின் பாதுகாப்புக்காக பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறியிருந்தார்.


இந்தப் பதிவை அவர் ஆகஸ்ட் 16-ஆம் தேதி பதிவிட்டிருந்தார். தற்போது மீண்டும் ஒரு துணிச்சலான பதிவை அவர் பதிவிட்டுள்ளார்.


ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆளும் அரசு வீழ்ந்து ஆட்சி தலிபான்கள் கையில் சென்றது. தலிபான் ஆட்சி அமைந்ததால் 1996களில் இருந்தபோது மிகக் கடினமான சட்டத்திட்டங்கள் அமலுக்கு வரும், பெண்களின் நிலைமை அதளபாதாளத்துக்குச் செல்லும் என்ற அச்சத்தில் அங்கிருந்து மக்கள் கும்பல் கும்பலாக மற்ற நாடுகளுக்குக் குடிபெயர முயற்சித்து வருகின்றனர். அண்டை நாடுகள் ஆப்கன் மக்களுக்கு தஞ்சம் வழங்குமாறு ஐ.நா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.