இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஆப்கன் இளைஞர் தலிபான் படையில் ஐக்கியமாகியுள்ளது தெரியவந்துள்ளது. சமூக வலைதளங்களில் துப்பாக்கியுடன் ஃபோட்டோ வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த ஜூன் மாதம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து 30 வயதே நிரம்பிய ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அப்துல் ஹக் நாடு கடத்தப்பட்டார். இந்தியாவில் அவர் சட்டவிரோதமாக தங்கியிருந்தது கண்டறியப்பட்டதால் அவர் நாடு கடத்தப்பட்டார். நாக்பூர் நகரில் திகோரி எனும் பகுதியில் அவர் 10 ஆண்டுகளாக சட்ட விரோதமாகத் தங்கியிருந்தது கண்டறியப்பட்டது.


இந்நிலையில் தான், நாடு கடத்தப்பட்ட அவர் ஆப்கானிஸ்தான் சென்று தலிபான் படையில் இணைந்தது தெரியவந்துள்ளது. சமூகவலைதளத்தில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்து அவர் வெளியிட்ட புகைப்படம் இந்திய குடியேற்ற அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 10 ஆண்டுகள் இங்கே தங்கியிருந்தவர் தற்போது தலிபான் படையில் இணைந்துள்ளதால் இங்கு ஏதும் சதிக் கும்பலுடன் அவர் தொடர்பில் இருந்தாரா? அவருடன் இன்னும் யாரும் இந்தியாவிலிருந்து தொடர்பில் இருக்கிறார்களா? என்றெல்லாம் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் அதன் நிமித்தமாக விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.


இந்தியா வந்தது எப்படி?


அப்துல் ஹக் கடந்த 2010-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு டூரிஸ்ட் விசாவில் வந்துள்ளார். ஆறு மாத காலம் மட்டுமே அந்த விசா செல்லுபடியாகும். ஆனால் அதற்கு மேலும் இங்கேயே தங்கிய அப்துல் ஹக் ஐ.நா அகதிகள் உரிமைகள் கவுன்சிலில் தஞ்சம் கோரி விண்ணப்பித்தார். ஆனால், அவர் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த குற்றத்துக்காக ஐ.நா அமைப்பு அவரது கோரிக்கையை நிராகரித்தது.


இந்நிலையில்தான் கடந்த ஜூன் மாதம் பாதுகாப்பு அமைப்புகளின் கண்காணிப்பு வளையத்துக்குள் வருகிறார் அப்துல் ஹக். அவர் தலிபான் ஆதரவு சிந்தனைகளைக் கொண்டிருப்பது அவரது சமூக வலைதளப் பக்கத்தின் வாயிலாக உறுதியானது. இதனையடுத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். நூர் முகமதுவின் உண்மையான பெயர் அப்துல் ஹக் என்பதும் அப்போது தான் தெரிந்தது. இதனையடுத்து அவர் நாடு கடத்தப்பட்டார். அவரது சமூகவலைதள பக்கத்தை மட்டும் தொடர்ந்து உளவு அமைப்புகள் கண்காணித்து வந்தன. இந்நிலையில், அவர் தலிபான் அமைப்பில் சேர்ந்துவிட்டது அம்பலமாகியுள்ளது.


ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வாபஸ் வாங்கப்பட்ட நிலையில் தலிபான் ஆட்சி அமைந்துள்ளது. தலிபான்கள் ஆட்சி எப்படி இருக்குமோ என்று உலகமே உற்று நோக்கி வருகிறது. தலிபான்கள் நாங்கள் முன்புபோல் இல்லை என்று கூறியிருந்தாலும் கூட அங்கு மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக ஐ.நா. கூறியுள்ளது. பத்திரிகையாளர்கள், அமெரிக்க, நேட்டோ படையுடன் தொடர்பில் இருந்தவர்கள், தூதரக ஊழியர்கள் எனப் பலரையும் தேடி வீடுவீடாக தலிபான்கள் வேட்டையில் இறங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.