தமிழ் சினிமாவில் ஒரு தரமான வில்லன் மற்றுமின்றி சிறப்பான குணச்சித்திர நடிகர் பிரகாஷ்ராஜ் குறித்து ஒரு நெகிழவைக்கும் தகவலை பகிர்ந்துள்ளார் மெட்ராஸ் படத்தின் நடிகர் அசோக் சாம்ராட்.
நடிகர் பிரகாஷ் ராஜ் திரையில் வேண்டுமானாலும் வில்லனாக இருக்கலாம் ஆனால் திரைக்கு வெளியே அவர் ஒரு உன்னதமான மனிதர். வாழ்க்கை அவருக்கு என்ன கொடுத்தது அதை திருப்பி கொடுக்க நினைக்கும் மனம் கொண்டவர். இதை நிரூபிக்கும் விதமாக 2020ம் ஆண்டு நடைபெற்ற ஒரு நெகிழ்ச்சியான பதிவை பகிர்ந்துள்ளார் நடிகர் அசோக் சாம்ராட். தந்தையை இழந்த ஒரு மாணவிக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் மேல் படிப்பு படிப்பதற்காக பிரகாஷ் ராஜ் நிதி உதவி செய்துள்ளார்.
"மூடர்கூடம்" படத்தின் இயக்குனர் நவீன் இந்த தகவல் குறித்து இணையதளத்தில் படித்து பலரிடம் இந்த தகவலை பகிர்ந்தும் உள்ளார். பிரகாஷ்ராஜ் இது குறித்து கேள்விப்பட்ட பிறகு இது உண்மை தானா? என கேட்டறிந்த பிறகே அந்த மாணவிக்கு உதவியுள்ளார்.
நெகிழவைக்கும் தருணம் :
திகிரிப்பள்ளியை சேர்ந்த திறமையான மாணவி ஸ்ரீ சந்தனா. தனது 9 வயதில் தந்தையை இழந்த பிறகு பெரும் பாடுபட்டு அவரது தாயார் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பு வரை படிக்க வைத்துள்ளார். மாணவிக்கோ இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் அதற்கு ஆகும் கட்டணத்தை கட்ட வசதி இல்லாத காரணத்தால் வேதனையில் இருந்த அந்த மாணவியிடம் பேசிய பிரகாஷ்ராஜ் சில நொடிகளிலேயே ஒரு நல்ல முடிவு எடுத்து அந்த மாணவியை படிக்க வைக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்துள்ளார்.
அந்த மாணவி இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரில் உள்ள சால்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று விட்டார். படிப்பதற்கு உதவியதையும் தாண்டி ஒரு படி மேலாக சென்ற பிரகாஷ்ராஜ் அந்த மாணவியின் படிப்பிற்கேற்ற ஒரு வேலை கிடைப்பதற்கு தன்னால் முடிந்த உதவியை செய்துள்ளார். மிகவும் மனநிறைவோடு இருக்கும் அந்த மாணவியும் அவரது தாயாரும் நேரில் சென்று தங்களது நன்றிகளை நடிகர் பிரகாஷ்ராஜுக்கு தெரிவித்தனர். அவரும் அந்த மாணவியை வாழ்த்தி அனுப்பியுள்ளார்.
உலகம் எனக்கு கொடுத்ததை நான் திருப்பி செலுத்த வேண்டியது என்னுடைய கடமை. அதை தான் நான் செய்துள்ளேன் என மிகவும் தன்னடமாக பதிலளித்துள்ளார் பிரகாஷ்ராஜ். இந்த காலத்தில் இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள். அந்த மனம் தான் கடவுள். இந்த மனிதம் நீடுடி வாழ்க !!!