பிரதீப் ரங்கநாதன்


கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). முதல் படத்திலேயே சென்சேஷனல் இயக்குநராக பெயரெடுத்த பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக லவ் டுடே படத்தின் மூலம் பெரிய பட்ஜெட் ஸ்டார்களின் படங்களுக்கே சவால் விட்டார். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக மட்டுமில்லாமல் தேர்ந்த நடிகராகவும் தன்னை வெளிப்படுத்தினார். இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் கூலாக கொஞ்ச நாட்களுக்கு இயக்குநரில் இருந்து ஓய்வெடித்து முழு நேர நடிகனாக முடிவு செய்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த ஓராண்டு காலமாக எல்.ஐ.சி படததில் நடித்து வருகிறார். இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி நாயகியாக நடிக்க, எஸ்.ஜே சூர்யா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.  7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.


அஸ்வத் - பிரதீப் ரங்கநாதன்






அடுத்தபடியாக ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் அஸ்வத் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். அஸ்வத் மற்றும் பிரதீப் ஆகிய இருவரும் ஒரே கனவோடு கல்லூரியில் விஸ்காம் சேர்ந்து படித்தவர்கள். கல்லூரியில் அஸ்வத்தின் ஜூனியரான பிரதீப் ரங்கநாதனிடம் ஒரு நாள் நீ நடித்து நான் படம் எடுக்க வேண்டும் என்று அஸ்வத் சொல்லியிருக்கிறார். சரியாக 10 ஆண்டுகள் கழித்து அஸ்வத் இயக்கத்தில் பிரதீப் நாயகனாக நடிக்கும் கனவு நிஜமாகிறது. கல்லூரி நண்பர்களான இந்த இருவரும் சேர்ந்து கூட்டணி அமைக்கும் இந்த படத்தை ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட தயாரிக்கிறது. இப்படத்திற்கு டிராகன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.


ஓ மை கடவுளே படத்தின் ஃபேண்டஸி கலந்த காதல் கதையை சொன்ன அஸ்வத் இந்தப் படத்தின் மூலம் எந்த மாதிரியான ஒரு கதையை சொல்ல இருக்கிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. டிராகன் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இயக்குநர் மிஸ்கின் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். படக்குழு குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இரண்டு இளம் இயக்குநர்கள் இணையும் இந்த படம் நிச்சயம் இளைஞர்களை கவரும் வகையில் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.