சுந்தர் சி இயக்கி நடித்துள்ள அரண்மனை படத்தில் வசூல் இரண்டாவது நாளில் எகிறியுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் படங்கள் எடுப்பதில் சிறந்தவர் இயக்குநர் சுந்தர் சி. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அரண்மனை என்ற பெயரில் பேய் படம் எடுத்தார். இப்படம் சிறப்பான வசூலை பெற்றது. மேலும் பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு வசூலை அள்ளியது. இதனைத் தொடர்ந்து அரண்மனை 2 ஆம் பாகம் 2016 ஆம் ஆண்டு வெளியானது.
இதன்பின்னர் 2021 ஆம் ஆண்டு அரண்மனை படத்தின் 3ஆம் பாகம் வெளியானது. முதல் பாகத்தை விட 2, 3 ஆம் பாகங்கள் சுமாரான வெற்றியைப் பெற்றது. இப்படியான நிலையில் கடந்த மே 3 ஆம் தேதி அரண்மனை படத்தின் 4 ஆம் பாகம் வெளியானது. இப்படத்தில் சுந்தர் சி, சந்தோஷ் பிரதாப், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ், கோவை சரளா, லொள்ளு சபா சேஷூ என ஏகப்பட்ட பேர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி அரண்மனை 4 படத்துக்கு இசையமைத்துள்ளார்.
அரண்மனை 4 படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. முந்தைய பாகத்தில் இடம்பெற்ற பல விஷயங்களை சுந்தர் சி இப்படத்தில் இடம்பெறாமல் செய்துள்ளது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது. இதனிடையே அரண்மனை 4 படம் முதல் நாளில் ரூ.4.15 கோடி வசூலை ஈட்டியது. 2வது நாளில் ரூ.6.42 கோடி வசூலை பெற்றுள்ளது. இரண்டு நாட்களில் ரூ.10 கோடி வசூலை பெற்றுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் இரண்டு நாட்களில் ரூ.1.08 கோடி வசூலைப் பெற்றுள்ளது.