நடன இயக்குநர், நடிகர் பிரபு தேவாவின் சினிமா பங்களிப்பை பெருமைப்படுத்தும் விதமாக  ‘100 நிமிடங்கள் 100 பிரபுதேவா பாடல்’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு 100 நிமிடங்கள் 100 பிரபுதேவா பாடல் என்ற உலக சாதனை நிகழ்ச்சி சென்னை ராஜரத்னம் ஸ்டேடியத்தில் நடத்த ஏற்பாடானது. இதில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொண்டனர். காலை 6 - 7.30 மணி வரை நடைபெற இருந்த நிகழ்ச்சிக்கு 9 மணி வரை பிரபு தேவா வரவில்லை. இதனால நிகழ்ச்சி தொடங்கவும் இல்லை. நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்கள், குழந்தைகள் வெயியில் நின்றிருந்தனர். 


இதில் பங்கேற்க ஏராளமான குழந்தைகள் ஆர்வத்துடன் வந்திருந்த நிலையில், பிரபு தேவா உரிய நேரத்தில் வராதது பங்காற்பாளர்களையும் குழந்தைகளின் பெற்றோர்களையும் அதிருப்தியடைய செய்தது. அதோடு மட்டுமல்லாமல், சில குழந்தைகள் வெயில் தாக்கம் தாங்க முடியாமல் மயங்கி விழுந்தனர். இதனால் குழந்தைகளின் பெற்றோர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் முறையிட்டனர். “காலை உணவும் கொடுக்கவில்லை. தண்ணீர் பாட்டில் மட்டுமே கொடுக்கப்பட்டது. குறித்த நேரத்தில் நிகழ்ச்சியும் தொடங்கப்படவில்லை. திட்டத்தில் ஏதாவது மாற்றம் என்றால் அது குறித்தும் எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. நிகழ்ச்சி நடக்குமா இல்லையா என்பது தெரியாமல் குழந்தைகளுடன் வெயிலில் தவிக்கிறோம்.” என்று நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெற்றோர் வேதனை தெரிவித்தார். 


பிரபுதேவா வீடியோ


நிகழ்ச்சி நடத்துவதில் பிரச்சனை ஏற்பட்டதால், பிரபு தேவா வீடியோவில் மன்னிப்பு கோரினார். அவர் பேசுகையில், “ இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் இருந்தேன். ஆனால், என் உடல் நிலை சரியில்லாததால் பங்கேற முடியவில்லை. இங்கு நடனமாட வந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்தார்.


குழந்தைகளை வெயிலில் காத்திருக்க வைத்தது, உரிய நேரத்தில் நிகழ்ச்சி வர முடியவில்லை எனில் அது குறித்த தகவல் சொல்லாதது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பொறுப்பற்ற செயல் உள்ளிட்டவை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.