கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( kilambakkam new bus terminus )


சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வதற்காக கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் பண்டிகை நாட்களுக்காக லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் பயணம் மேற்கொள்வதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையை கடந்து செல்வதற்கே, சுமார் 3 மணிநேரம் வரை ஆனது. இதற்கு தீர்வு காணும் வகையில், கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் கட்டமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த ஆண்டு இறுதியில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.




 நடைமுறை சிக்கல்கள்


புதியதாக ஒரு பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டால்,  இருக்கக்கூடிய நடைமுறை சிக்கல்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சற்று அதிகமாகவே இருந்தது. காரணம் சென்னை புறநகர் பகுதியில் இந்த பேருந்து நிலையம் அமையப்பெற்றதால் சென்னை உள்பகுதிகளிலும், வட சென்னை பகுதிகளில் இருக்கும் பொது மக்களும்  பேருந்து நிலையத்தை பயன்படுத்துவதற்கு சிரமம் ஏற்பட்டது. இதன் காரணமாக பயணிகள் பல்வேறு இடையூறுகள் மற்றும் இன்னல்களுக்கு ஆளானார்கள். அதேபோன்று முறையான இணைப்பு பேருந்துகள் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன.


 பிரதான குற்றச்சாட்டு


இதில் பிரதான குற்றச்சாட்டு கிளாம்பாக்கம் ரயில் நிலையம்  (Kilambakkam Railway Station ) இல்லாததுதான். சென்னை மற்றும் சென்னை புறநகர் இணைக்கக்கூடிய முக்கிய போக்குவரத்து மார்க்கமாக, மின்சார ரயில்கள் உள்ளது. ஆனால் கிளாம்பாக்கத்திற்கு ரயில் நிலையம் இல்லை. அருகில் இருக்கும் ரயில் நிலையம் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.  அதை பயன்படுத்தி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வருவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதாக  பயணிகள் குமறல்களை தெரிவித்திருந்தனர்.




கிளாம்பாக்கம் ரயில் நிலையம் - kilambakkam railway station


இதனால் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது. கிளாம்பாக்கத்திற்கு வண்டலூரில் இருந்து புதிய ரயில் வழித்தடத்தை அமைக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்தநிலையில்  வழக்கமாக ரயில்வே திட்டங்களை ரயில்வே துறையே நிதி ஒதுக்கி செய்யும். ஆனால், இதற்கு நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பிலே 20 கோடி ரூபாய் நிதி அதற்காக ஒதுக்கப்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் அதற்கான பணிகள் ரயில்வே நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 500 மீட்டர் தூரத்தில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள், கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் தேதி துவங்கப்பட்டது. மேலும் பணிகள் முடிவடைந்து ஆகஸ்ட் மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




ஆகஸ்ட் மாதத்திற்குள் பணிகள் முடிவு பெறுமா ?


கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ( kilambakkam railway station ) அமைக்கும் பணி  நடைபெற்று வருகிறது. மூன்று நடை மேடைகள், ரயில் நிலைய மேலாளர் அறை, டிக்கெட் அலுவலகம், ரயில்வே பாதுகாப்பு படை  போலீஸ் அலுவலகம்.  அதே போன்று அத்தியாவசிய தேவைகளாக கருதப்படுகின்ற குடிநீர்,  இருக்கை வசதி,  கழிவறை வசதி,  கண்காணிப்பு கேமராக்கள், நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட  வசதிகளுடன் இந்த ரயில் நிலையம் அமைய உள்ளது.  இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், இதுவரை 30 சதவீத பணிகள் மட்டுமே   முடிவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிகாரி தரப்பில் விசாரித்த பொழுது,  திட்டமிட்டபடி பணிகள் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தனர். நிலம் அளவை மற்றும் நிலம் கையகப்படுத்தும் பிரச்சினை காரணமாக பணிகளை துவக்க சற்று தாமதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.