விஷால்


ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் (Actor Vishal) நடித்த ரத்னம் படம் கடந்த மார்ச் 26ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கோடை விடுமுறை காரணத்தினால் இப்படத்திற்கு எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. நடிகர் விஷால் நடித்த தாமிரபரணி, தீராத விளையாட்டுப் பிள்ளை உள்ளிட்ட படங்களை திரையரங்கில் மறு வெளியீடு செய்யும் திட்டங்கள் ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க, மறுபக்கம் இயக்குநராக களமிறங்கத் தயாராகியுள்ளார்.


துப்பறிவாளன் 2


மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான படம் துப்பறிவாளன் படத்தில், பிரசன்னா, அனு இமானுவேல், வினய், ஆண்ட்ரியா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். கனோட் டாயல் எழுதிய புகழ்பெற்ற  நாவல் கதாபாத்திரமான ஷெர்லாக் ஹோல்ம்ஸ் ஹாலிவுட்டில் முழு நீள படமாகவும், வெப் சீரிஸாகவும் வெளியாகியுள்ளது.


இதே படங்களின் சாயலோடும் ஷெர்லாக் ஹோல்ம்ஸின் குணாம்சங்களுடன் மிஸ்கின் இயக்கிய படம் துப்பறிவாளன், விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபில்ம் ஃபேக்டரி இந்தப் படத்தைத் தயாரித்திருந்தது. இந்தப் படத்தின்போது நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் மிஸ்கின் இடையில் கடும் தகராறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்க இருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்தார்.


இந்நிலையில், ரத்னம் படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து துப்பறிவாளன் 2 படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கிறார்  விஷால். விஷாலின் குருநாதரான ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார். முந்தைய பாகங்களில் நடிகர் பிரசன்னா விஷாலின் நண்பராக நடித்தார். தற்போது இப்படத்தில் அர்ஜூன் வில்லனாக நடிக்கிறார் என்றும் மற்றொருபுறம் பிரசன்னாவின் கேரக்டருக்கு பதிலாக நடிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒரு நடிகராக தனது கரியரைத் தொடங்குவதற்கு முன்பாக விஷால் நடிகர் அர்ஜூன் நடித்த வேதம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேலும்  நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா, விஷால் நடித்த ‘பட்டத்து யானை’ படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


இயக்குநராக வெற்றிபெறுவாரா இயக்குநர்


ஒரு நடிகராக தனது தொடக்ககால படங்களில் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் விஷால். ஆனால் சமீப காலங்களில் குறிப்பிட்டு சொல்லும்படி அவரது நடிப்பு வெளிப்படவில்லை என்பதே ரசிகர்களின் எண்ணம். இப்படியான நிலையில் இயக்குநராக அவர் களமிறங்கியுள்ளார். உலகப் புகழ்பெற்ற கதாபாத்திரம் என்றாலும் ஷெர்லாக் ஹோல்ம்ஸின் குணாம்சங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மிஸ்கின் தன்னுடைய ஸ்டைலில் எடுத்த படம் துப்பறிவாளன். ஆனால் அந்த டிரேட்மார்க் மிஸ்கின் ஸ்டைல் இல்லாமல் இவ்வளவு எதிர்பார்ப்புகள் இருக்கும் ஒரு கதையை எப்படி கையாளப் போகிறார் என்பது தான் அனைத்து ரசிகர்கள் மனதிலும் இருக்கும் கேள்வி!