சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வினு வெங்கடேஷ் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் 'வுல்ஃப்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
தென்னிந்திய படங்களின் நடன இயக்குனரான சுந்தரின் மூத்த மகனாக பிறந்தவர், பிரபு தேவா. கர்நாடகாவில் பிறந்த இவர், பரதநாட்டியம் போன்ற இந்திய பாரம்பரிய நடனத்தை கற்று கொண்டார். முதன் முதலாக, மெளன ராகம் படத்தில், இடம்பெற்ற “பனிவிழும் இரவு” பாடலில் குழல் ஊதும் குட்டி பையனாக நடித்தார்.
பின்னர், “அக்னி நட்சத்திரம்” படத்தில் நடன கலைஞராக அறிமுகமானார்; பின்னணியில் நடனமாடி கொண்டு இருந்தவர், கமலின் “வெற்றி விழா” படம் மூலமாக நடன இயக்குனராக அவதாரம் எடுத்தார். நடனத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், பல படங்களில் நடிக்கவும் செய்தார். அத்துடன் கமர்ஷியல் படங்களை இயக்கும் அளவிற்கு தன்னை வளர்த்துக்கொண்டார். இவருக்கு பிரபு தேவா ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனமும் உள்ளது.
தற்போது வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வருகிறார்; அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா, ஆர் ஜே ரமேஷ் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள 'வுல்ஃப்' படத்தின் மூலம் கன்னட திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்க உள்ளது.
எஸ் ஜே சூர்யாவின் உதவி இயக்குநராக பணியாற்றி சிண்ட்ரெல்லா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தற்போது வுல்ஃப் படத்தை இயக்கி வரும் வினு வெங்கடேஷ் கூறுகையில், "இப்படம் வரலாற்று காலத்திலிருந்து இன்றுவரை பயணிக்கும். அறிவியல் புனைக்கதை திரைப்படமான இதில், திகில் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகள் இடம் பெற்றிருக்கும். புதுச்சேரி, சென்னை, பெங்களூரு, அந்தமான் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்," என்றார்.
படத்தின் தலைப்பைப் பற்றி பேசிய வினு, "படத்தின் வில்லன் மற்றும் கதாநாயகன் இருவரும் ஓநாயின் குணாதிசயங்களைக் கொண்டிருப்பார்கள். எந்த ஓநாய் வெற்றி பெறுகிறது என்பதுதான் கதையின் கரு" என்றார்.
பிரபல ஹாலிவுட் படமான வேன் ஹெல்சிங் படத்திலும் கதாநாயகன், அவ்வப்போது ஓநாய் மனிதனாக மாறிவிடுவார். இது போன்று மனிதர்கள், ஓநாய் போன்று நடந்துகொள்ளும் கதைகள் கொண்ட பல படங்கள் ஹாலிவுட்டில் வெளியாகிவுள்ளது. அந்த வகையில், தமிழ் சினிமாவில் ஓநாய் குணாதிசயம் கொண்ட ஹீரோக்களின் கதையை வினு வெங்கடேஷ் சொல்ல முன்வந்திருக்கிறார்.
வுல்ஃப் படக்குழுவினர்
வுல்ஃப் படத்தின் இசையை அம்ரேஷ் கணேஷ், ஒளிப்பதிவை அருள் வின்சென்ட், படத்தொகுப்பை லாரன்ஸ் கிஷோர், கலைத் துறையை மணிமொழியன் ராமதுரை ஆகியோர் கவனிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
மேலும் படிக்க : Ponniyin Selvan 2: முரசு கொட்டுங்கள்.. சோழர்கள் வருகிறார்கள்..! பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு..!