சாய் தரம் தேஜின் ரிபப்ளிக் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் பவன் கல்யாண் கலந்துகொண்டார். சாய் தரம் தேஜ் இன்னும் சாலை விபத்தில் ஏற்பட்ட காயங்களில் இருந்து மீளாததால், அக்டோபர் 1 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் அவரது ரிபப்லிக் பட ப்ரோமோஷன் வேலைகளை பெரிய நடிகர்கள் கவனித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து நடந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் இந்நிகழ்விப் பேச போகிறார் என்ற செய்திகள் வந்ததில் இருந்தே தெலுங்கு சினிமா உலகிற்கு பதற்றம் பற்றிக்கொண்டது. ஏனெனில் அவர் கடைசியாக வக்கீல் சாப் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் தான் பேசினார். அதில் அவர் பேசிய பேச்சு தெலங்கானா முதலமைச்சரை எரிச்சலடைய செய்தது. அதனை தொடர்ந்து ஒரு பழைய சட்டத்தை எடுத்து வந்து அமல் படுத்தி வக்கீல் சாப் திரைப்படத்தின் ரிலீஸில் சிக்கல் உண்டாக்கினார். அப்போது இயற்றிய சட்டம் அவரை மட்டும் பாதிக்காமல், ஒட்டுமொத்த திரைப்பட இன்டஸ்ட்ரியையும் பாதித்தது. அந்த பாதிப்பில் இருந்து மீளாத தெலுங்கு சினிமா, இன்னமும் அந்த இன்னல்களை அனுபவித்து வருகிறது. பெரிய திரைப்படங்களுக்கு முதலமைச்சர் அனுமதி வழங்குவதில்லை. இந்நிலையில், வக்கீல் சாப் ஆடியோ லாஞ்சிற்கு பிறகு தற்போதுதான் மேடையில் முதன் முறையாக பேசி இருக்கிறார். தெலுங்கு திரையுலகமே பவன் கல்யாண் என்ன பேச போகிறார்? முதலமைச்சர் பற்றி எதுவும் பேசி விடுவாரா? பேசி அதனால் நிலமை இன்னும் மோசமாகுமோ என்ற அச்சம் நிலவி வந்தது.



ஆனால் அச்சப்படும்படி எதுவும் அவர் நிகழ்வில் பேசவில்லை. அவர், "பொதுவாக தேஜின் எந்த நிகழ்விலும் நான் கலந்துகொள்வதில்லை. ஏனென்றால் எங்கள் குடும்பத்தில் பெரியவர்கள் ஆதரவு இருக்கிறதென்ற நம்பிக்கையில் யாரும் வளரவில்லை, விழுந்தால் அவரே எழுந்து, நின்று, நடக்க துவங்க வேண்டும். ஆனாலும் நான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டது அவர் இங்கு இல்லை என்பதற்காகவோ, தயாரிப்பாளர்கள் உடைந்து போய் இருக்கிறார்கள் என்பதற்காகவோ அல்ல, நல்ல கருத்துகள் பேசும் ஒரு திரைப்படம் உருவாகி உள்ளது, அதனை அனைவரும் காண வேண்டும் என்று சொல்வதற்காக வந்தேன் என்றார். தேஜ் குறித்து அனுதாபப்பட்டவர்களுக்கும், விரைவில் குணமடைய வாழ்த்தியவர்களுக்கும் நன்றி. அவருக்கு விபத்து நிகழ்ந்தது பற்றி சில கட்டுரைகள் படித்தேன், மிகவும் வேதனையாக இருந்தது. நாட்டில் நிறைய பிரச்சனைகள் உள்ளன அது குறித்து எழுதுங்கள்." என்று கூறினார்.



சாய் தேஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜகபதி பாபு, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை தேவகோட்டா இயக்கியிருக்கிறார். மணிசர்மா இசையமைத்துள்ளார், பிரவீன் கேஎல் படத்தொகுப்பு செய்துள்ளார், சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜே.பி. என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் 1 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.