இந்த ஆண்டில் இதுவரை வெளியான திரைப்படங்களில் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் போர் தொழில் திரைப்படம் முன்னேறி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த ஜூன் 9ஆம் தேதி அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத் குமார், அசோக் செல்வன், நிகிலா விமல், சரத்பாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘போர் தொழில்’.


சுமார் ஆறு கோடி செலவில் பெரும் விளம்பரங்கள், ப்ரொமோஷன்கள் இன்றி வெளியான போர் தொழில் திரைப்படம் வெளியானது முதலே பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளத் தொடங்கியது. மேலும், முதலில் குறைவான அரங்குகளே போர் தொழில் படத்துக்கு கிடைத்த நிலையில், நாள் ஆக ஆக படத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து காட்சிகள் அதிகரிக்கப்பட்டன. 


குறிப்பாக சென்னையில் இப்படத்துக்கு பல திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டதுடன், நள்ளிரவு காட்சிகளும் அறிவிக்கப்பட்டு, பெரும்பாலான இடங்களில் படம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடியது.


தற்போது மூன்றாவது வார இறுதியை போர் தொழில் படம் எட்டியுள்ள நிலையில், தொடர்ந்து இப்படம் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் அண்டை மாநிலமான கேரளாவிலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.


இந்நிலையில், இந்தியா முழுவதும் சென்ற வெள்ளிக்கிழமை முடிய 15 நாள்களில் போர் தொழில் திரைப்படம் மொத்தம் 21.72 கோடிகளை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


குறிப்பாக கேரளாவில் 15 நாள்களில் 5 கோடிகள் வரை போர் தொழில் வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல் திரைப்படம் வெளிநாடுகளிலும் காட்சிகள் அதிகரிக்கப்பட்டு போர் தொழில் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


முன்னதாக கண்டென்ட் தான் ராஜா என்பதை போர் தொழில் நிரூபித்துள்ளதாகவும், நல்ல சினிமா வழக்கமான பேக்கேஜ் இல்லாமலும் வெற்றி பெற முடியும் என்பதை போர் தொழில் திரைப்படம் நிரூபித்துள்ளதாகவும்  நடிகை ராதிகா சரத்குமார் ட்வீட் செய்து தன் கணவர் சரத்குமார் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.


ராட்சசன் படத்தினை போர் தொழில் நினைவுபடுத்துவதாகவும் தமிழ் சினிமா ரசிகர்கள் ஒருபுறம் தெரிவித்து வரும் நிலையில், மற்றொரு புறம் தமிழ் சினிமாவின் சிறந்த  சைக்கோ த்ரில்லர் படங்களில் ஒன்றாக போர் தொழில் உருவெடுத்துள்ளதாகவும் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.


சென்ற வாரம் ஆதிபுருஷ், பொம்மை போன்ற படங்கள் வெளியான நிலையில், இந்த  வாரம் தண்டட்டி, தலைநகரம் 2, பாயும் ஒளி நீ எனக்கு, ரெஜினா உள்ளிட்ட 10 படங்கள் ரிலீஸாகின, ஆனால் இவற்றின் இடையிலும் 3ஆவது வாரமாக போர் தொழில் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.


மேலும் படிக்க: Seenu Ramasamy: 'பொதுவெளியில் சாதி பெயரை கொண்ட பாடல்களை ஒலிபரப்ப தடை செய்யுங்க' - சீனு ராமசாமி வேண்டுகோள்