நீயா நானா


பிக் பாஸ், அது இது எது, ஸ்டார் மியூசிக் போன்ற ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது விஜய் தொலைக்காட்சி. அந்த நிகழ்ச்சிகளில் ஒன்றுதான “நீயா நானா”. சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை, சாதாரண மனிதர்களை இரண்டு குழுக்களாக பிரித்து, இரு தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு, ஆராயும் நிகழ்ச்சிதான் நீயா நானா. 


வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பப்பராகும் இந்த ஷோவை கோபிநாத் தான் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் இதுவரை பலதரப்பட்ட தலைப்புகள் குறித்து பேசப்பட்டு வருகிறது.  அந்த வகையில், இந்த வாரம் ‘சமையல் வேலை செய்பவர்கள் vs சமையல் வேலைக்கு பணி அமர்த்தியவர்கள்’ என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. 


"சாப்பிட கூட வழியில்லை"


‘எதற்காக சமையல் வேலைக்கு செல்கிறீர்கள்?’ என்ற கேள்வியை கோபிநாத் முன்வைத்தார். அதற்கு ஒருவர், "நான் என் பசங்க மூன்று வேலையும் சாப்பிடணும்ன்னு தான் வேலைக்கு போனேன். என்னுடைய கணவர் குடிப்பழக்கத்தில் அடியாகிவிட்டார். இதனால் எங்கள் வீட்டில் ரொம்ப கஷ்டமான சூழல் உள்ளது. முதலில் நான் ஒரு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்தேன். அங்கு என்னை ஒருநாள் சமைக்க சொன்னார்கள் . சமைச்சி கொடுத்து பிடித்து போனதால் அந்த வேலைக்கு பணியமர்த்திகிட்டாங்க" என தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய மற்றொரு பெண்மணி, ”எனக்கு முதலில் அப்பா சரியில்லை. தினமும் குடிபாரு. எங்க வீட்டில் மொத்தம் 4 பிள்ளைங்க. ஓரளவு சொத்து இருந்தது. அப்போது நான் 8ஆம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். 13 வயசு ஆரம்பிச்ச நேரத்துல நான் வயதுக்கு கூட வரல, எங்கப்பா என்னை பெங்களூரில் இருக்கும் ஊதுவத்தி தயாரிக்கும் கம்பெனிக்கு வேலைக்கு அனுப்பினார். அங்கு 8 ஆண்டுகள் வேலை பார்த்தேன்.  இதனால் எனக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டது. இப்படி பல பிரச்சனைகளை தாண்டி வந்ததால் என்னால் படிக்க முடியவில்லை. ஆனால் படிக்கணும் ஆசை" என்று மனம் வருந்தி பேசினார். 


இதனைக் கேட்டு கோபிநாத், இங்கு சமையல் வேலை செய்யும் பெண்கள், அந்த வேலைக்கு போக காரணம் கணவர், அப்பா என சொன்னீர்கள். ஆனால் அதை விட குடி தான் இங்கு பல பிரச்சினைக்கு காரணமாக உள்ளது. இது நிறைய நிகழ்ச்சிகளில் தெரிய வருகிறது எனக் கூறினார்.


 ”பாத்ரூம் கூட இல்ல"


வேலைக்கு செல்லும் வீட்டில் சந்திக்கும் சிக்கல்கள் என்ன என்பது குறித்து கோபிநாத் கேள்வி எழுப்பினார். அதற்கு பேசிய ஒரு பெண், ”சமைச்சிட்டீங்களா, போயிட்டு வாங்கன்னு சொல்லிடுவாங்க. சாப்டீங்காளான்னு பேச்சுக்கு கூட கேட்க மாட்டாங்க. சாப்பாடு தரவும் மாடாங்க” என்று தன்னுடைய வேதனையை கூறினார்.


அடுத்ததாக இன்னொரு பெண், ஒரு வீட்டில் ஒரு  3 மணி நேரம் வேலை பார்த்தால் அதுவரைக்கும் டாய்லெட், பாத்ரூம் கூட போக முடியாது. 3 மணி நேரம் வயிறு வலியில் துடிச்சிட்டு அதன்பிறகு எங்க வீட்டுக்கு வந்த பிறகு தான் போக முடிகிறது" என்று கூறினார்.


மேலும், பேசிய ஒரு பெண், ”அவங்களுக்கெல்லாம் நாங்க ஆசையா சமைச்சி, சாப்பாடு போட்டு அழகு பார்க்கிறோம். அதேபோன்று எங்களுடைய குடும்பத்தையும் அழைத்து ஒரு நாள் சாப்பாடு போட்டா நல்லாயிருக்கும். இது ஒரு மரியாதையாகவும் இருக்கும்” என்று மற்றொரு பெண் கூறினார்.   எந்த வேலை செய்பவர்களாக இருந்தாலும்,  அவர்களை சமமாக பார்ப்பது என்பது மிகவும் முக்கியம் என்று கூறினார் கோபிநாத்.