மார்ச் 1 ஆம் தேதி வெளியாகும் படங்கள்


வரும் மார்ச் 1ஆம் தேதி த்ரில்லர், ஆக்‌ஷன், ரொமான்ஸ் உள்ளிட்ட ஜானர்களில் படங்கள் வெளியாக இருக்கின்றன. கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி உள்ளிட்ட மாதங்களில் வெளியான தமிழ் படங்கள் பெரிய அளவில் வெற்றிபெறாத நிலையில், மார்ச் மாதம் வெளியாகும் இந்தப் படங்கள் ரசிகர்களின்  எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறதா எனப் பார்க்கலாம். 


போர்



டேவிட், சோலோ உள்ளிட்ட படங்களை இயக்கிய பிஜாய் நம்பியார் இயக்கியிருக்கும் படம் ’போர்’. அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராமன், டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.


தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் இந்தப் படம் மார்ச் 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் ட்ரெய்லர் வரவேற்பைப் பெற்றது. கல்லூரி காலத்தில் மாணவர்களுக்கு இடையிலான மோதல், காதல், என ஆக்‌ஷன் ரொமான்ஸ் கலந்து செம புத்துணர்ச்சியான ஒரு படமாக இப்படம் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


ஜோஸ்வா : இமைபோல் காக்க



கெளதம் மேனன் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் வருண் ஹீரோவாக நடித்திருக்கும் படம்  “ஜோஸ்வா இமைபோல் காக்க” . கொரோனா காலக்கட்டத்திற்கு முன்பே படப்பிடிப்பு நடைபெற்று முடிந்த நிலையில், இப்படம் தற்போது மார்ச் 1ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது . வேல்ஸ் நிறுவனம் சார்பாக இப்படத்தை  ஐசரி கணேஷ்  தயாரித்துள்ளார்.  இந்தப் படத்தில் கிருஷ்ணா, ராஹி, யோகி பாபு, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கார்த்திக் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஆண்டனி எடிட்டிங் பணியையும், எஸ்.ஆர்.கார்த்திக் ஒளிப்பதிவு பணியையும் மேற்கொண்டுள்ளனர்.


சத்தமின்றி முத்தம் தா



ராஜ்தேவ் இயக்கத்தில்  நடிகர் ஸ்ரீகாந்த் நடித்துள்ள படம் ‘சத்தமின்றி முத்தம் தா’. இப்படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக கன்னட நடிகை பிரியங்கா திம்மேஷ் நடித்துள்ளார். சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படம் வரும் மார்ச் 1ஆம் தேதி வெளியாகிறது.


அதோமுகம்



அறிமுக இயக்குநர் சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “அதோமுகம்”. சித்தார்த் மற்றும் சைதன்யா ஆகிய இருவரும் நாயகன் நாயகியாக இப்படத்தில் அறிமுகமாகிறார்கள். இவர்கள் தவிர்த்து அனந்த் நாக், நக்கலைட்ஸ் கவி, வர்கீஸ், சரித்திரன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ரீல் பெட்டி நிறுவனம் மற்றும் தரிகோ ஃபிலிம் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி இருக்கும் இப்படம் மார்ச் 1ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.


தோழர் சேகுவேரா



 நடிகர் சத்யராஜ் , மொட்டை ராஜேந்திரன் , நாஞ்சில் சம்பத் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் தோழர் சேகுவேரா. அலெக்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். பி.எஸ்.அஸ்வின் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.  அனீஷ் எட்மண்ட் இப்படத்தை தயாரித்துள்ளார். வரும் மார்ச் 1ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.