பிரதமர் மோடி அரசு நலத்திட்ட பணிகள், பா.ஜ.க. பொதுக்கூட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாட்டிற்கு வந்தார். பல்லடத்தில் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தை முடித்த பிரதமர் மோடி, நேரடியாக ஹெலிகாப்டர் மூலமாக மதுரை சென்றார். அங்கு மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து இன்று காலை மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார். இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று குலசேகரப்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார். 


ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அடுத்தப்படியாக தூதுக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது ஏவுதளம் அமைக்க திட்டமிட்டுள்ளது. பல்வேறு ஆய்வு பணிகளுக்கு பின் குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 2,300 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏவுதளம் அமையவுள்ளது. 


ஸ்ரீஹரிகோட்டவில் இருந்து பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்ற ராக்கெட்டுகள் ஏவப்படும் நிலையில் குலசேகரப்பட்டினத்தில் அமைய இருக்கும் ஏவுதளத்தில் முதலில் சிறிய வகை ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் ஏவுதளத்திற்கான பணிகள் நிறைவடைய இன்னும் 2 ஆண்டுகள் ஆகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எத்தனையோ இடங்கள் இருந்தும் ஏன் குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டது என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். அதாவது குலசேகரப்பட்டினத்திற்கும் அண்டார்டிக்காவிற்கும் இடையே எந்த ஒரு நிலைமும் கிடையாது. மேலும் பூமத்திய ரேகைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் இடம் என்பதால் நமக்கு எரிபொருள் செலவு குறையும். இதன் காரணமாகவே குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, அடிக்கல் நாட்டப்பட்டுள்ள புதிய ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சிறிய ரக ராக்கெட்டான ரோகிணி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.


குலசேகரப்பட்டினம் நிகழ்ச்சியை முடித்துக் கொண்ட பிறகு பிரதமர் மோடி, திருநெல்வேலி செல்கிறார். ஹெலிகாப்டர் மூலமாக அங்கு செல்லும் பிரதமர் மோடி பாளையங்கோட்டை ஐ.என்.எஸ். பள்ளி வளாகத்தில் தரையிறங்குகிறார். பிரதமர் மோடி திருநெல்வேலிக்கு காலை 11.15 மணிக்கு செல்கிறார்.


பின்னர், அங்கு நடக்கும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் முன்பு பங்கேற்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரை, தூத்துக்குடி திருநெல்வேலி மற்றும் தென் மாவட்டங்கள் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்கும் இடங்கள் அனைத்தும் பாதுகாப்பு வளையத்திற்கு கீழே கொண்டு வரப்பட்டுள்ளது.