இன்று தமிழ் சினிமாவை நடிகர், தயாரிப்பாளர் என பல வடிவங்களில் நிர்வாக ரீதியாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் விஷால். பிரபல தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் மகன் தான் விஷால் என்பது பலருக்கு தெரியும். ஆனால், விஷாலுக்கு முன்பே தமிழ் சினிமாவில் களமிறக்கப்பட்டு, அது பொய்த்து போக, அவரது அண்ணன் நடிப்பிலிருந்து ஓரங்கட்டியதும், அதன் பின் விஷால் களமிறக்கப்பட்டதும் எத்தனை பேருக்கு தெரியும்?


விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா. அஜய் என்கிற பெயரில் அறியப்பட்டார். பிரபல தயாரிப்பாளரின் மகன் என்கிற முறையில் அஜய்க்கு சினிமா வாய்ப்பு எளிதில் கிடைத்தது .அதற்கு முன், அவர் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியிருந்தாலும், ஹீரோவாக 1999ல் தான் அறிமுகமானார். அதே ஆண்டில் அண்ணன் தங்கச்சி, பூப்பறிக்க வருகிறோம் என இரு படங்களில் நடித்தார் அஜய். 






பூப்பறிக்க வருகிறோம் படம் தான் எடுத்த எடுப்பிலேயே பெரிய எதிர்பார்ப்பை அவருக்கு தந்தது. ஆம், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உடன், மாளவிகா ஜோடியாக நடித்திருந்ததால், படத்திற்கு அவ்வளவு எதிர்பார்ப்பு. இது ஒரு முழுநீள காதல் கதை. ஏ.வெங்கடேஷ் இயக்கிய இத்திரைப்படத்திற்கு வித்யாசகர் இசையமைத்திருந்தார். படத்தில் பாடல்கள் அனைத்துமே துள்ளல் ரகமாக இருக்கும். 


பெரும் நடிகர்கள், அனுபவ இயக்குனர், அபூர்வ இசையமைப்பாளர் என பல சிறப்புகளை கொண்டிருந்தும், சரியான ஹீரோ தேர்வு இல்லாததால் படம் பெரிய அளவில் போகவில்லை. அதே நேரத்தில் படத்தை எடுத்துச் செல்வதற்கான எல்லா முயற்சிகளையும் தயாரிப்பு நிறுவனம் மேற்கொண்டது. சிவாஜி வீணடிக்கப்பட்டார் என்று கூட அந்த சமயத்தில் விமர்சனங்கள் வந்தன.


அதே செப்டம்பர் மாதத்தில் வெளியான ஜோடி திரைப்படத்தின் வெற்றி, பூப்பறிக்க வருகிறோம் படத்தின் வெற்றியை தடுத்தது என்பதை விட, பூப்பறிக்க வருகிறோம் தாக்குபிடிக்க முடியாமல் தவித்தது என்று தான் கூற வேண்டும். ஒருவேளை அந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்தால், விஷால் இயக்குனர் ஆகியிருப்பார். அஜய் ஹீரோவாக தொடர்ந்திருப்பார். ஆனால், பூப்பறிக்க வருகிறோம் படம் பெரிய அளவில் போகாததாலும், அஜய்க்கான ஹீரோ கதவுகள் சாத்தப்பட்டதாலும், அந்த குடும்பத்திலிருந்து யாராவது ஒருத்தர் ஹீரோ ஆக வேண்டும் என்கிற கனவில், விஷால் ஹீரோ ஆனார். அதிர்ஷ்டம் அவரை அழைத்துச் சென்றதும். 






அண்ணன் தங்கச்சி, பூப்பறிக்க வருகிறோம், லவ் மேரேஜ் படங்களோடு நடிப்பு முழுக்கு போட்ட அஜய், அதன் பின் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். விஷாலின் பெரும்பாலான படங்களுக்கு அவர் தான் தயாரிப்பாளர். இன்றும் அவர் தயாரிப்பாளராகவே அறியப்படுகிறார். ஒரு நடிகர் தொடங்கிய இடத்திலேயே முடிந்து போனார். ஆனாலும், எப்படியாவது நடிகராகிவிடுவோம் என 1999 செப்டம்பர் 17 இதே நாளில் பூப்பறிக்க வருகிறோம் படத்தை ரிலீஸ் செய்த அஜய்யின் கனவுகள் எப்படியெல்லாம் இருந்திருக்கும்? 23 ஆண்டுகள் கடந்து அதை நினைக்கும் போது நமக்கே கொஞ்சம் நெருடலாக தான் இருக்கிறது.