துலிப் டிராபி கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மத்திய மண்டலம் மற்றும் மேற்கு மண்டலம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மேற்கு மண்டல அணியின் வேகப்பந்துவீச்சாளர் சிந்தன் காஜா பந்தை பேட்ஸ்மேனை நோக்கி வீசியுள்ளார். அப்போது மத்திய மண்டல அணியின் வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களுடன் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அவருடைய தலையில் பந்து பட்டுள்ளது.
இந்நிலையில் அவருக்கு பலத்த வலி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மைதானத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்துள்ளது. அவரை களத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதன்பின்னர் மருத்துவ உதவி பெற்று மீண்டும் வெங்கடேஷ் ஐயர் களத்திற்கு பேட்டிங் செய்ய வந்திருந்தார். அவர் 14 ரன்கள் எடுத்திருந்தப் போது ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் மத்திய மண்டல அணியின் ஃபில்டிங்கின் போது வெங்கடேஷ் ஐயர் ஃபில்டிங் செய்ய களத்திற்கு வரவில்லை. அவருக்கு பதிலாக அசோக் மனேரியா களத்தில் ஃபீல்டிங் செய்தார். வெங்கடேஷ் ஐயர் தற்போது நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.
அவருடைய காது பகுதிக்கு பின்னால் பந்து அடித்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கு சற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு மயக்கம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய மேற்கு மண்டல அணி 257 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து ஆடிய மத்திய மண்டல அணி 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதன்பின்னர் மேற்கு மண்டல அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. அப்போது சிறப்பாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா சதம் விளாசினார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கு மண்டல அணி 3 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்திருந்தது. மத்திய மண்டல அணியைவிட மேற்கு மண்டல அணி 259 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பிருத்வி ஷா 104* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.