தமிழ் இலக்கிய உலகில் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் நாவல், பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய இந்த நாவலைத் தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் தொடக்கிப் பல முன்னணி இயக்குநர்கள் படமாக நான், நீ என்று போட்டி போட்டனர். ஆனால் அது கடைசி வரை கனவாக மட்டுமே இருந்தது.
இதனையடுத்து நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு 2019-ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் நாவலை, படமாக்கும் வேலையை இயக்குநர் மணிரத்னம் கையில் எடுத்தார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தை லைகா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தில் யார்,யார் எந்த கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
அதனைப் போக்கும் வகையில் சமீபத்தில் ஆனந்த விகடன், பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர்கள் ஏற்று நடிக்கும் கதாப்பாத்திரங்களை கற்பனை கலந்த ஓவியமாக வெளியிட்டது. அவை பின் வருமாறு,
- பிரகாஷ் ராஜ்- சுந்தர சோழர்
- பார்த்திபன் - சின்ன பழுவேட்டரையர்
- கார்த்தி - வந்தியத்தேவன்
- விக்ரம் - ஆதித்த கரிகாலன்
- சரத்குமார்- பெரிய பழுவேட்டரையர்
- ஜெயம் ரவி - அருள்மொழி வர்மன்
- ஐஸ்வர்யா ராய் - நந்தினி
- த்ரிஷா -குந்தவை
- ஐஸ்வர்யா லட்சுமி - பூங்குழலி
- ஜெயராம் - ஆழ்வார்க்கடியான் நம்பி
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக செட் போட்டு நடைபெற்றது.
இந்நிலையில் ஹைதராபாத், பாண்டிச்சேரி ஆகுய பகுதிகளில் நடைபெற்று வந்த பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பிற்குப் படக்குழு விறுவிறுப்பாக தயாராகியுள்ளது.
அதன்படி அடுத்தகட்ட படப்பிடிப்பிற்குப், பொன்னியின் செல்வன் படக்குழு மத்தியப்பிரதேசம் பறந்துள்ளன. ஒர்ச்சா பகுதியில் மிக பிரமாண்டமாக படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் ஒர்ச்சா பகுதியில் முழுக்க முழுக்க அரண்மனைகள், கோவில்கள், கற்சிற்பங்கள் அதிகமாக காணப்படும் என்பதால் மணிரத்னம் இந்த இடத்தை தேர்வு செய்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பிற்காக கார்த்தி, படத்தின் இயக்குநர் மணிரத்னத்துடன், பிரகாஷ் ராஜ் விமான நிலையத்தில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "மீண்டும் வேலையில். குவாலியரில் இறங்கியுள்ளோம். தற்போது ஓர்ச்சா செல்லுகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். அப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தற்போது வரை 80 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. 2022-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் பொன்னியின் செல்வன் - 1 படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.