சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட  மாஸ் வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தற்போது உருவாக்கியுள்ள திரைப்படம்  மாநாடு. இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் புகைப்படம் வெளியான நிலையில் , படத்தின் டீசர் மற்றும் சிங்கிள் டிராக் வரிக்காணொளி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  மாநாடு படத்தில்  சிம்புவுக்கு ஜோடியாக  கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். தற்போது படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.  விரைவில் வெளியீட்டு தேதியுடன் மாநாடு படத்தின் அடுத்த போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கவுள்ள அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நான் ஈ , புலி போன்ற படங்களில் வில்லனாக நடித்த கிச்சா சுதீப் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக  கூறப்படுகிறது. மங்காத்தா அளவிற்கு மாஸ் கேங்க்ஸ்டர் படமாக இப்புதுப்படம் இருக்குமாம். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் உருவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெங்கட் பிரபு ஐந்து மொழிகளில் திரைப்படம் இயக்குவது இதுவே முதல் முறை.இந்த படம் குறித்த முதற்கட்ட தகவல் மட்டுமே தற்போது வெளியாகியுள்ள சூழலில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிச்சா சுதீப் தமிழ், கன்னடம் , தெலுங்கு  உள்ளிட்ட மொழிகளில் மட்டுமல்லாமல் இந்திய சினிமா அனைத்திலும் பிரபலமானவர். ஆனால் சமீபத்தைய படங்கள் எதுவும் இவருக்கு கைக்கொடுக்காத சூழலில், வெங்கட் பிரபுவின் படம் தனக்கு அனைத்து மொழிகளிலும் கைக்கொடுக்கும் என நம்புகிறாராம். வெங்கட் பிரபு மற்றும் கிச்சா சுதீப் கூட்டணியில் உருவாகிவரும் இந்த புதிய படத்தின் கதை விவாத பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிகிறது.



வெங்கட் பிரபு தற்போது கசட தபற என்னும் ஆந்தாலஜி திரைப்படத்தை தயாரித்துள்ளார். இவருடன் இணைந்து டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரனும் ஆந்தாலஜியை தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் ஒடிடியில் வெளியாக உள்ளது. இது குறித்த அறிவிப்பும் டிரைலரும் சமீபத்தில் வெளியானது. கசட தபற ஆந்தாலஜியை  இயக்குநர் சிம்பு தேவன் இயக்கியுள்ளார். இந்த ஆந்தாலஜியில் மொத்தம்  ஆறு குறும்படங்கள் இடம்பெறும் என தெரிகிறது. அனைத்தையும் சிம்புதேவனே இயக்கியுள்ளாராம். சிம்புதேவன் இயக்கத்தில்  விஜய் நடிப்பில் உருவான ‘புலி’ திரைப்படம் வெளியாகியிருந்தது. ஃபேண்டஸி திரைப்படமாக உருவான புலி படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை.


இந்நிலையில்  கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு பிறகு மிகுந்த நம்பிக்கையுடன் இந்த ஆந்தாலஜியை சிம்புதேவை கையில் எடுத்துள்ளாராம். முன்னதாக ‘புத்தம் புது காலை’, ‘பாவக்கதைகள்’, ‘நவரசா’ போன்ற ஆந்தாலஜி  படங்கள் வெளியானது. இந்த  ஆந்தாலஜினின் ஒவ்வொரு குறும்படத்தையும் ஒவ்வொரு இயக்குநர் இயக்கியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.